/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உர விற்பனை நிலையங்களில் ஆய்வு கடைகளிடம் விளக்கம் கேட்பு
/
உர விற்பனை நிலையங்களில் ஆய்வு கடைகளிடம் விளக்கம் கேட்பு
உர விற்பனை நிலையங்களில் ஆய்வு கடைகளிடம் விளக்கம் கேட்பு
உர விற்பனை நிலையங்களில் ஆய்வு கடைகளிடம் விளக்கம் கேட்பு
ADDED : நவ 26, 2024 04:38 AM
விருதுநகர்; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக வத்திராயிருப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 உர விற்பனை நிலையங்களில் வேளாண் துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 203 தனியார் உர விற்பனை நிலையங்கள், 179 தொடக்க ளோண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வினியோகிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் தற்போது யூரியா 2902 டன், டி.ஏ.பி., 764 டன், பொட்டாஷ் 626 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1590 டன் விவசாயிகளின் தேவைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நேற்று தினமலர் நாளிதழில், பூச்சிக் கொல்லி மருந்துகள் வீரியம் குறைந்ததாகவும், தரமற்றதாகவும் இருப்பதால் அதை வாங்கி பயன்படுத்திய விவசாயிகள் கடும் மகசூல் பாதிப்பிற்கு ஆளாவதாக செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் அனைத்து வட்டார உர ஆய்வாளர்களையும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உர விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல் இன்றியோ, அதிகபட்ச விலையை விட அதிக விலைக்கு விற்றாலோ பி.ஓ.எஸ்., இயந்திரத்திற்கும் உண்மை இருப்பிற்கும் வேறுபாடு காணப்பட்டாலோ, உரங்களை பதுக்கி வைத்திருந்தாலோ 'ஓ' படிவமின்றி விற்பனை செய்தாலோ, யூரியா உரத்தை விவசாயம் இல்லாத பயன்பாட்டிற்கு பயன்படுத்தினாலோ போலியான உரங்களை விற்பனை செய்தாலோ, உரக்கட்டுப்பாட்டு சட்டம் உர விற்பனை நிலையங்களின் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பில் 2 உர விற்பனை நிலையங்களுக்கு உரக்கட்டுப்பாட்டு ஆணையை மீறி செயல்பட்டதற்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. உரம் கிடைப்பதில் பிரச்னை, ரசீது இல்லாமல் விற்பது, அதிக விலைக்கு விற்பது, பிற உரங்களை வாங்க கட்டாயப்படுத்துவது, உரம் பதுக்கல் பற்றிய புகார்களை அந்தந்த பகுதிகளுக்கான வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் விவசாயிகள் தெரிவிக்கலாம் என வேளாண் இணை இயக்குனர் விஜயா தெரிவித்தார்.