ADDED : டிச 31, 2025 05:53 AM

சாத்துார்: படுமோசமான சாலைகள், பாதையில் தேங்கும் கழிவுநீர், பழுதான மினி பவர் பம்பு, திறந்தவெளியை பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு,சாத்துார் ஊராட்சி ஒன்றியம் புல்வாய்பட்டியில் ரோடு வாறுகால் உள்ளிட்டஅடிப்படை வசதியின்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
புல்வாய்ப்பட்டி குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் ருக்மணி, சுப்புலட்சுமி, ராமலட்சுமி மாரியம்மாள், குருசாமி, மகேந்திரன், மாடசாமி, சிவகணேசன்ஆகியோர் கூறியதாவது:
நடுத்தெரு வடக்கு தெரு மேல தெரு கிழக்குத் தெரு ஆகிய தெருக்களில் ரோடு போட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
கற்கள் பெயர்ந்து தற்போது பாதை முழுவதும் மண் சாலையாக மாறிவிட்டது. கரடு முரடாக உள்ளதால் நடந்து செல்பவர்கள் கால்களில் கற்கள் குத்தி காயம் ஏற்படுகிறது.
தெருக்களில் இருந்த வாறுகால் துார்ந்து போன நிலையில் கழிவு நீர் வாறுகாலில் செல்லாமல் பாதையில் தேங்கி நிற்கிறது.
இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
முதல் இரண்டு தெருக்களில் மட்டுமே ரோடு வாறுகால் வசதி உள்ளது. அனைத்து தெருவிலும் ரோடு வசதி செய்து தர வேண்டும்.
கட்டி முடித்துள்ள வாறு கால்களை தள்ளுவதற்கு துப்புரவு பணியாளர்கள் வருவது கிடையாது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தேங்கியுள்ள குப்பை தாங்களே தள்ளி அகற்றிக் கொள்ளு கின்றனர்.
மாதம் ஒருமுறை வரும் துப்புரவு பணியாளர் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகளை மட்டும் பெருக்கி எடுத்துச் செல்கின்றார்.
கழிவு நீர் செல்லும் வாறுகாலை சுத்தம் செய்வது கிடையாது.
உப்பு தண்ணீர் குழாய் பழுதான நிலையில் உள்ளது. மினி பவர் பம்புடன் தண்ணீர் தொட்டி அமைத்திருந்தனர். அது சேதமடைந்த பின்னர் மீண்டும் சீரமைத்து தரவில்லை.
மகளிர் சுய உதவி குழு கட்டடம் புதர் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. ஆண்கள், பெண் களுக்கான சுகாதார வளாகம் இல்லை. திறந்தவெளியில் இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டிய நிலை உள்ளது.
ரோடு போட்டு தாருங்கள் வாறு கால் கட்டி தாருங்கள் என்று அதிகாரிகளுக்கு மனு கொடுத்தால் நிதியில்லை என்று பதில் கூறுகின்றனர். குப்பை தொட்டிகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.
சுடுகாட்டிற்கு செல்லும் ரோடும் கரடு முரடாக உள்ளதால் மழைக்காலத்தில் இறந்தவர்கள் உடலை சுமந்து கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படு கிறோம்.
காலியான இடங்களில் கழிவு நீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. கொசு மருந்து அடிக்க வேண்டும். தற்போது மேலத்தெருவில் ரூ3 லட்சம் மதிப்பில் வாறுகால் கட்ட படவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் வேலையை ஆரம்பிக்கவில்லை.
மற்ற தெருக்களிலும் வாறுகால் வசதி தேவை. அம்மன் கோயிலுக்கு செல்லும் ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது தற்போது புதர் மண்டிய நிலையில் உள்ளது.
இதன் அருகில் உள்ள வடக்கு குறுக்குத் தெருக்களில் சாலை வசதி வாறுகால் வசதி இல்லை.
அதிகாரிகள் கூடுதல் நிதி ஒதுக்கி அடிப்படை வசதிகளை செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

