ADDED : ஜூலை 02, 2025 07:17 AM
அருப்புக்கோட்டை : பாலையம்பட்டி ஊராட்சி மணி நகர் பகுதி குடியிருப்போர் 30 ஆண்டுகளாக குண்டும் குழியுமான ரோடு, வாறுகால் இல்லாததால் தேங்கும் கழிவுநீர், மாதத்திற்கு ஒருமுறை குடிநீர்சப்ளை , நாய்கள் தொல்லை என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலையம்பட்டி ஊராட்சியை சேர்ந்த மணி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் செயலாளர் ராஜாராம், பொருளாளர் பழனிக்குமார், உறுப்பினர்கள் ராமர், வெங்கடசாமி, மனோன்மணி,விஜயலட்சுமி, அனுராதா உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது:
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சியை சேர்ந்த எங்கள் மணி நகர் பகுதி உருவாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
4, 5, தெருக்கள் உள்ள எங்கள் பகுதியில் ரோடுகள் இல்லை வாறுகால் அமைக்கப்படவில்லை. மணி நகர் வரும் மெயின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
இதில் நான்கு வருடங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக ரோட்டின் நடுவே தோண்டி பணி முடிந்த பின் ஏனோ தானோ என்று மூடி விட்டு சென்றனர்.
இதனால் ரோடு ஒரு பகுதி உயர்ந்தும் மறுபகுதி தாழ்ந்தும் இருப்பதால் இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள் தடுக்கி விழ வேண்டியுள்ளது.
இதேபோன்று தெருக்களில் வாறு கால் அமைக்கப்படவில்லை.
ஊராட்சி, ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை வைத்தோம்.
அதன் பின் பி.டி.ஓ., மூலம் தங்கள் பகுதிக்கு ரோடு, வாறுகால் அமைத்து விட்டதாக பதில் வந்துள்ளது. வாறுகால் போடாமலேயே அமைத்து விட்டதாக பதில் தந்துள்ளனர்.
காலியான பிளாட்டுக்களில் தான் வீடுகளின் கழிவு நீரை விட வேண்டி உள்ளது.
தேங்கிய கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படுகிறது. குடிநீர் எங்கள் பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. அதுவும் கலங்கலாக உள்ளது.
தாமிரபரணி குடிநீரையும் போர்வெல் தண்ணீரையும் கலந்து கொடுப்பதால் தண்ணீரின் சுவை மாறி உள்ளது. வாரம் ஒரு முறையாவது தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எங்கள் பகுதியின் முக்கியமான பல ஆண்டுகள் கோரிக்கையான ரோடு, வாறுகால்களை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.