ரோடு, வாறுகால், மின்விளக்கு, மயானம் இல்லை:தவிக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் விஷால் நகர் குடியிருப்பாளர்கள்.
ரோடு, வாறுகால், மின்விளக்கு, மயானம் இல்லை:தவிக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் விஷால் நகர் குடியிருப்பாளர்கள்.
UPDATED : செப் 22, 2026 03:37 PM
ADDED : செப் 22, 2026 03:31 PM
ஸ்ரீவில்லிபுத்துார்:ரோடு, வாறுகால், மின்விளக்கு, சமுதாயக்கூடம், மயானம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்துார் விஷால் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி குடியிருப்பாளர்கள் ராமர், டேவிட் குமார், தர்மராஜன், முனீஸ்வரன், மாலாபாண்டியன், ராஜம்மாள், குணசுந்தரி கூறியதாவது,
ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் விழுப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். விஷால் நகர், ஆசீர்வாதம் நகர், எழில் நகர் பகுதிகளை உள்ளடக்கி நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் ஆண்டுதோறும் வீடுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கிருஷ்ணன் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள எங்கள் குடியிருப்பு பகுதிக்கு மெயின் ரோட்டில் இருந்து சிறிது தூரம் மட்டுமே தார் ரோடு போட்டுள்ள நிலையில் பெரும்பாலான பகுதிகளில் தார் ரோடு வசதிகள் இல்லை.
பஸ் ஸ்டாப்பும், பயணியர் நிழற்குடையும் இல்லாததால் டவுன் பஸ்கள் கூட மெயின் ரோட்டில் நிற்பதில்லை. இதனால் வெளியூர் சென்று விட்டு வரும்போது டூவீலர்கள், ஆட்டோக்களை பயன்படுத்தி வேண்டிய நிலை உள்ளது.
அனைத்து தெருக்களிலும் முறையான தார் ரோடோ, பேவர் ப்ளாக் ரோடோ இல்லாத நிலையில் மழை பெய்தால் சகதி ஏற்பட்டு சிரமத்துடன் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் பள்ளி வேன்கள் கூட குடியிருப்பு பகுதிக்கு வருவதில்லை. முறையான வாறுகால் வசதி இல்லாததால் ஒவ்வொரு வீட்டு கழிவு நீர், காலி இடத்தில் செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
ஊராட்சி பணியாளர்கள் குப்பை வாங்க வருவதில்லை. தேங்கி கிடக்கும் குப்பைகள் அப்புறப்படுத்தப்படுவதில்லை.
மின்கம்பங்கள் இருந்தும் எந்த ஒரு மின்கம்பத்திலும் மின்விளக்குகள் இல்லாததால் குடியிருப்பு பகுதி முழுவதும் இருண்டு காணப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான நிலங்கள் இருந்தும் சமுதாயக்கூடம் கட்டித் தரப்படவில்லை. மயான வசதி இல்லாததால் இறந்தவர்களை ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, எங்கள் குடியிருப்பு பகுதியில் முறையான ரோடு, வாறுகால், தெருமின்விளக்கு, பூங்கா, மயானம், சமுதாயக்கூடம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் , என்றனர்.
