UPDATED : அக் 20, 2026 04:58 PM
ADDED : அக் 20, 2026 04:54 PM
குடிநீர் ,ரோடு , தெருவிளக்கு, வாறுகால் வசதிகள் இல்லை
* அல்லல்படும் ஆர்.கே., நகர் குடியிருப்புவாசிகள்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஆர்.கே., நகர் பகுதியில் குடிநீர் ,ரோடு , தெருவிளக்கு, வாறுகால் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.கே. நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் மோகன்ராஜ், செயலாளர் வீரமணி, உபதலைவர் ரூபி மற்றும் உறுப்பினர்கள் பாண்டியராஜ், ராமலக்ஷ்மி, ஆரோக்கியா, ஈஸ்வரி கூறியதாவது : காந்தி நகர் ஜெமினி பள்ளியின் பின்புறம் உள்ள எங்கள் பகுதியை ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. குடிநீர் வருவதே இல்லை. ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய்கள் இணைப்பு வீட்டுக்கு வீடு உள்ளது. ஆனால் தண்ணீர் வருவது இல்லை. அதிக விலை கொடுத்து வாங்கித்தான் குடிநீரை பயன்படுத்துகிறோம். குடிநீருக்கும் மட்டும் மாசம் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. அடிப்படை வசதிகள் கேட்டு பல முறை ஊராட்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்து பயன் இல்லை. காந்தி நகர் சர்வீஸ் ரோட்டில் இருந்து எங்கள் பகுதிக்குள் வரும் ரோடு சேதமடைந்து கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக ரோட்டில் நடக்க முடிவதில்லை. தெருக்களில் வாறு கால்கள் இல்லாததால் கழிவுநீர் ரோட்டில் தான் தேங்கி கிடக்கிறது. வீடுகளில் குப்பை வாங்குவதற்கு தூய்மை பணியாளர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகின்றனர். இதனால் குப்பை தேங்கி சுகாதார கேடாக உள்ளது. குப்பையை காலி இடங்களில் தான் கொட்ட வேண்டியுள்ளது. மெயின் ரோட்டில் இருந்து எங்கள் பகுதிக்கு வரும் ரோட்டில் மின்விளக்கு இல்லை. இரவு நேரங்களில் தெருக்களில் வர பெண்கள் பயப்படுகின்றனர். சர்வீஸ் ரோட்டில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் கிளம்பும் புகையால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. நகரின் முக்கியமான காந்தி நகர் சந்திப்பு அருகில் எங்கள் பகுதி இருந்தும் எந்தவித வளர்ச்சி பணிகளும் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால் நாங்கள் திண்டாடுகிறோம். என்றனர்.
படம் உள்ளது
