/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெருக்களில் ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை
/
தெருக்களில் ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை
ADDED : ஜன 30, 2024 07:13 AM

சிவகாசி : சிவகாசி அருகே ஆனையூர் மாரியம்மன் நகரில் ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
சிவகாசி அருகே ஆனையூர் மாரியம்மன் நகரில் ஆறு தெருக்கள் உள்ளன. இங்கு ஒரு சில தெருக்களில் மண் பாதை மட்டுமே உள்ளது. மீதமுள்ள தெருக்களில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தார் ரோடு போடப்பட்டது. ஆனால் ஒரே மாதத்திலேயே கற்கள் பெயர்ந்து ரோடு சேதம் அடைந்து விட்டது. குண்டும் குழியுமாக மாறிவிட்ட ரோட்டில் மழைக்காலங்களில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவர முடியவில்லை.
டூ வீலரில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். இப்பகுதி முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. இதில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி விடுகின்றது. கொசு உற்பத்தியாகி இரவில் மட்டுமல்லாது பகலிலும் குடியிருப்புவாசிகளை பாடாய் படுத்துகிறது. தவிர பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள்ளே புகுந்து விடுகின்றது. தெருவிளக்குகளும் பற்றாக்குறையாக இருப்பதால் மக்கள் 6 மணிக்கு மேல் நடமாட முடியவில்லை. இங்குள்ள ரேஷன் கடைக்கு செல்கின்ற ரோடும் சேதம் அடைந்துள்ளது.
ராஜேந்திரன், ஓய்வு ராணுவ வீரர்: இப்பகுதிக்கு இதுவரையிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை குடிப்பதற்கு மட்டுமின்றி குளிக்க, துணி துவைக்க என புழக்கத்திற்கும் தண்ணீரை விலை கொடுத்து தான் வாங்க வேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயபால்: அனைத்து தெருக்களிலும் ரோடு சேதம் அடைந்துள்ளது. மழை பெய்தால் போக்குவரத்து முற்றிலும் தடைபடுகிறது. இப்பகுதியில் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்.
கணபதி கோபால், ஓய்வு கிராம நிர்வாக அலுவலர்: காலி மனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீமை கருவேல மரங்கள் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் சர்வ சாதாரணமாக நடமாடுகிறது. வீட்டை விட்டு வெளியேறவே அச்சமாக உள்ளது. குப்பை சேகரிக்க ஆட்கள் வருவதில்லை.