/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெருக்களில் ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை
/
தெருக்களில் ரோடு சேதம், குடிநீர் பற்றாக்குறை
ADDED : பிப் 13, 2024 05:09 AM

சிவகாசி : தெருக்களில் ரோடு சேதம், வாறுகால் துார்வார வில்லை, புழக்கத்திற்கு தண்ணீர் இல்லை என திருத்தங்கல் சத்யா நகர் முனீஸ்வரன் காலனி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
திருத்தங்கல் சத்யா நகர் முனீஸ்வரன் காலனியில் ரோடு சேதம், தண்ணீர் பற்றாக்குறை முக்கிய பிரச்சனையாக உள்ளது. இங்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட ரோடு மீண்டும் சீரமைக்கப்படவில்லை. இதனால் டூவீலர் உட்பட எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. ரோடு சேதத்தால் இதே பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். தெருக்களில் நாய்கள் குழந்தைகள், பள்ளி மாணவர்களை கடித்து துன்புறுத்துகிறது. மாதம் இருமுறை வருகின்ற குடிநீர் அனைவருக்கும் போதுமானதாக இல்லை வாரம் ஒரு முறையாவது குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
மாரியம்மாள், குடும்பத் தலைவி: முனீஸ்வரன் காலனியில் நான்கு தெருக்களிலும் ரோடு சேதம் அடைந்துள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வெளியேற வழி இல்லை. இதே பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு வருகின்ற கர்ப்பிணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.எனவே உடனடியாக சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.
சுந்தரமூர்த்தி, தனியார் ஊழியர்: தெருக்களில் உள்ள பெரும்பான்மையான வாறுகால் சேதம் அடைந்துள்ளது. மேலும் துார்வாரப்படாததால் கழிவு நீர் தெருவிற்கு வந்து விடுகின்றது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. சத்யா நகர் மெயின் ரோடு சேதம் அடைந்துள்ளது.
வீரபத்திரன், கூலித் தொழிலாளி: இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்திற்கு தண்ணீர் இல்லை. குடிநீரும் பற்றாக்குறையாக உள்ள நிலையில் புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லாததால் அனைத்து தேவைக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனவே தங்கு தடை இன்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.