/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.67 கோடி
/
பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.67 கோடி
பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.67 கோடி
பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.67 கோடி
ADDED : ஆக 06, 2025 12:13 AM
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் 2021ல் நடந்த சாத்துார் அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ரூ.5.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பசுமை தீர்ப்பாயத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2021 பிப்., 12ல் மாரியம்மாள் பட்டாசு ஆலை விபத்தில் 27 பேர் பலியாகினர். மேலும் 26 பேர் காயமுற்றனர்.
2022ல் பசுமை தீர்ப்பாயம் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு காயத்திற்கு ஏற்ப தலா ரூ.2 முதல் ரூ.15 லட்சம் வரை வழங்க உத்தரவிட்டது.
இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இத்தொகையில் 10 சதவீதத்தை மத்திய அரசும், 10 சதவீதத்தை மாநில அரசும் வழங்க வேண்டும். மீதமுள்ளதை ஆலை உரிமையாளர் வழங்க வேண்டும்.
இதற்கு பொறுப்பாளராக அரசின் தலைமை செயலாளர் நியமிக்கப்பட்டார். கலெக்டர் மூலம் நிவாரணம் வழங்க வேண்டும்.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சரியான வாரிசுதாரர்களுக்கு போய் சேர்கிறதா என கண்காணிக்க வேண்டும் என வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
2021க்கு பிறகும் அதிக விபத்துக்கள் நடந்து விட்டன. தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி இழப்பீடு வழங்காமல் அரசு தாமதம் செய்து வந்தது. இதனால் பலியானோரின் குடும்பத்தினர் வறுமையில் வாடினர்.
இந்நிலையில் ஜூலை 11ல் ரூ.5 கோடியே 67 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியிட்டதாக பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு இதுதொடர்பான விசாரணையில் தெரிவித்தது.
இதையடுத்து 45 நாட்களுக்குள் விருதுநகர் கலெக்டர் சரியான பயனாளிகள், வாரிசுதாரர்களை தேர்வு செய்து இழப்பீடு வழங்க தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் உத்தரவிட்டனர்.
தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவும், நிதி ஒதுக்கீடும் முன்மாதிரியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறினர்.