/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்களால்' தண்டு வடம் பாதிக்கும் அபாயம்...: தேவையற்ற பகுதிகளில் அகற்ற எதிர்பார்ப்பு
/
'ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்களால்' தண்டு வடம் பாதிக்கும் அபாயம்...: தேவையற்ற பகுதிகளில் அகற்ற எதிர்பார்ப்பு
'ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்களால்' தண்டு வடம் பாதிக்கும் அபாயம்...: தேவையற்ற பகுதிகளில் அகற்ற எதிர்பார்ப்பு
'ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்களால்' தண்டு வடம் பாதிக்கும் அபாயம்...: தேவையற்ற பகுதிகளில் அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 02, 2025 11:26 PM

மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி, நகராட்சிகள், ஊரக பகுதிகளில் உள்ள ரோடுகளில் மக்கள் சிலர் தன்னிச்சையாக சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி வேகத்தடைகளை அமைத்ததை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர்.
வேகத்தடைகள் உரிய அளவீட்டின்படி அமைக்காததால் விபத்து ஏற்பட்டு, உயிர்சேதம், படுகாயம் ஏற்படுகிறது. முறையற்ற வேகத்தடைகளை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு முதுகுதண்டுவடம், இடுப்பு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என மக்கள், வாகன ஓட்டிகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த நிலையில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 255 வேகத்தடைகளில் 46 இடங்களில் வேகத்தடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அதே போல் ஊரக பகுதிகளில் உள்ள 672 வேகத்தடைகளில், உரிய அளவீட்டின்படி இல்லாத வேகத்தடைகளை கண்டறிய ஊராட்சிகள் உதவி இயக்குனர் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் 125 வேகத்தடைகள் கடந்தஆண்டு அகற்றப்பட்டன. தற்போது வரையிலும் அகற்றப்பட்டு வருகிறது. ஊராட்சி நிர்வாகங்கள்சார்பிலும் வேகத்தடைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இப்போது நகர்ப்பகுதிகளில் ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ் எனும் அதிர்வு வேகத்தடைகள் முக்கிய மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் போடப்பட்டுள்ளன.
விருதுநகரில் ராமமூர்த்தி ரோடு, சாத்துார் ரோடு போன்ற பகுதிகளில் ஓராண்டாக செயல்பாட்டில் உள்ளன.
இந்த அதிர்வு வேகத்தடைகள் அடுத்தடுத்து அமைக்கப்படுவதாலும், சிறியதாக இருப்பதாலும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இவற்றாலும் முதுகு வலி, இடுப்பு வலி, தண்டு வட வலி ஏற்படுவதாக பல வாகனஓட்டிகள் கூறுகின்றனர்.
ஆனால் இதை மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டியின் முடிவு அடிப்படையில் நகர்ப்பகுதிகளில் வேகத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவை நிரந்தரமாக இருப்பதாலும், ஓராண்டை தாண்டி பயன்பாட்டில் இருப்பதாலும் இதனால் பலர் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை வேகத்தடைகளை அகற்றி அந்த இடங்களில் மெதுவாக செல்லவும் என ஆங்கிலத்தில் வரைந்துஉள்ளனர். இது போன்று 'ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்களையும்' அகற்றிவிட்டு அந்த இடங்களில் செய்யலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஓவர் ஸ்பீடுகளை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தி அதன் மூலம் அபராதம் விதிப்பதன் மூலம் நகர்ப்பகுதிகளில் அதிக வேகத்தில் சென்று விபத்து ஏற்படுத்துவோரை கட்டுப்படுத்த முடியும்.