/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்குவாரி லாரிகளால் சேதமாகுது ஊரக ரோடுகள்
/
கல்குவாரி லாரிகளால் சேதமாகுது ஊரக ரோடுகள்
ADDED : ஜன 21, 2024 03:07 AM

விருதுநகர்: விருதுநகரில் கல்குவாரிகளுக்கு செல்லும் கனரக லாரிகள் பல ஊரக ரோடுகளை பயன்படுத்துவதால் அவை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் கனிமவளத்துறை சார்பில் நிறைய கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அதன் மூலம் பெறப்படும் சீனியரேஞ்ச் நிதி மூலம் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒரு சிலர் அளவுக்கு அதிகமான எடையை ஏற்றி கனரக வாகனங்களை ஊரக பகுதிகளில் இயக்குகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு ஊரக பகுதிகளின் ரோடுகள் இவ்வாறு சேதமடைந்துஉள்ளன.
அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்துார் பகுதிகளில் இந்த பிரச்னை அதிகஅளவில் உள்ளது. விருதுநகர் பட்டம்புதுாரில் இருந்து மலைப்பட்டி செல்லும் ரோடானது சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது.
இவ்வழியை தான் மலைப்பட்டி மக்களும், பட்டம்புதுார் மக்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் டூவீலரில் சென்றால் நிச்சயம் சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கும் அளவுக்கு மண் மேவி உள்ளன. ஜல்லி கற்களும் ஆங்காங்கே பரவி கிடக்கின்றன.
மேலும் லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக செல்வதால் புகை, துாசுக்களை கிளப்பிவிடுகின்றன.இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர்.
ஆகவே ஊரகப்பகுதிகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் குவாரி லாரிகளின் எடையளவு முறையாக பின்பற்றப்படுகிறதா, ரோடு சேதத்திற்கு காரணமாக அதிக பாரம் ஏற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

