/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆட்டோக்களில் 12 பேர் பயணம் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
/
ஆட்டோக்களில் 12 பேர் பயணம் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
ஆட்டோக்களில் 12 பேர் பயணம் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
ஆட்டோக்களில் 12 பேர் பயணம் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
ADDED : ஜன 25, 2025 04:43 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பில் பல்வேறு கிராமப்புற வழித்தடங்களில் ஆட்டோக்களில் 12 பேர் வரை ஏற்றிச் செல்வதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது.
இருந்தபோதிலும் காலை, மாலை வேலை நேரங்களில் அதிகளவு மக்கள் நகர் பகுதிக்கு வருவதால் ஆட்டோக்களில் பயணித்து வருகின்றனர்.
இதில் ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் மம்சாபுரம், மேல தொட்டியபட்டி, அச்சங்குளம் பகுதிகளுக்கும், வத்திராயிருப்பில் தம்பிபட்டி, கூமாபட்டி பகுதிகளுக்கும் ஆட்டோக்கள் அதிகளவில் மக்கள் பயணிக்கின்றனர்.
இதில் ஆட்டோ டிரைவரின் இரு புறமும் இருவரும், டிரைவரின் சீட்டுக்கு பின்பு மரப்பலகை அமைத்து அதில் மூவரும், அனுமதி பெற்ற சீட்டில் மூன்று பேரும், ஆட்டோவின் பின்புறம் லக்கேஜ் வைக்கும் இடத்தில் நான்கு பேரும் என மொத்தம் 12 பேர் அமர்ந்து பயணிக்கின்றனர்.
இதில் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து மம்சாபுரம் செல்லும் ரோட்டில் பொன்னாங்கண்ணி கண்மாய், மேல தொட்டியபட்டி செல்லும் பாதையில் கூட்டுறவு மில் எதிரில் உள்ள ஓடையை ஒட்டியுள்ள குறுகிய ரோடு, வத்திராயிருப்பில் இருந்து கூமாபட்டி செல்லும் வழியில் விராகசமுத்திரம் கண்மாய் கரையிலும் ஆட்டோக்கள் அதிவேகத்தில் செல்வதால் விபத்து அபாயம் காணப்படுகிறது. இதை போலீசார் கண்கூடாக பார்த்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, விபரீதங்கள் ஏற்படும் முன்பு போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
மேலும் ஆபத்தை உணராமல் அவசரமாக ஆட்டோவில் பயணித்து விபத்து ஏற்பட்டால் எவ்வித இழப்பீடும் கிடைக்காது என்பதை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

