/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் களை கட்ட துவங்கியது பட்டாசு விற்பனை
/
சிவகாசியில் களை கட்ட துவங்கியது பட்டாசு விற்பனை
ADDED : அக் 01, 2024 11:39 PM
சிவகாசி: தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் பல்வேறு மாவட்டத்திலிருந்து வியாபாரிகள், மக்கள் பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு வர துவங்கியுள்ளனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர் சாத்தூர் வெம்பக்கோட்டை பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. 2000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது, சரவெடி தயாரிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவுப்படி இப்பகுதி ஆலைகளில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது.
சில வாரங்களாக சிவகாசி பகுதியில் பட்டாசு வியாபாரம் மந்தமாக இருந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் சிவகாசி பகுதியில் பட்டாசு வியாபாரம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பட்டாசு வியாபாரிகள் நேரடியாக பட்டாசு கொள்முதல் செய்வதற்காக சிவகாசிக்கு வரத் துவங்கியுள்ளனர்.
ஒரு சில வியாபாரிகள் சிவகாசியில் தங்கி தீர விசாரித்து பட்டாசு வாங்கி செல்வர். அந்த வகையில் ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட வியாபாரங்களும் சூடு பிடித்துள்ளது. மேலும் வீடுகளுக்கு வாங்குவதற்கும் வெளி மாவட்டத்தினர் சிவகாசிக்கு வரத் துவங்கியுள்ளனர். அதனால் தற்போது சிவகாசியில் பட்டாசு வாங்க வரும் வியாபாரிகள், மக்களால் நகர் பரபரப்பாக உள்ளது.
தாமதமாக வந்தால் கேட்கின்ற வெரைட்டி பட்டாசுகள் கிடைக்காது என்பதால் அடுத்தடுத்த வாரங்களில் சிவகாசி பகுதியில் பட்டாசு வியாபாரம் இன்னும் களைகட்டும்.