/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் பட்டாசு ஆலை விபத்து: உள்குத்தகை உரிமையாளர் கைது
/
சாத்துார் பட்டாசு ஆலை விபத்து: உள்குத்தகை உரிமையாளர் கைது
சாத்துார் பட்டாசு ஆலை விபத்து: உள்குத்தகை உரிமையாளர் கைது
சாத்துார் பட்டாசு ஆலை விபத்து: உள்குத்தகை உரிமையாளர் கைது
ADDED : ஜன 06, 2025 03:21 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வீரார்பட்டி ஊராட்சி பொம்மையாபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான விவகாரத்தில் உள்குத்தகை எடுத்த சிவகாசி வனிதா பயர் ஒர்க்ஸ் நிறுவன உரிமையாளர் சசிபாலன் 53, கைது செய்யப்பட்டார்.
சிவகாசி அருகே ஆலமரத்துபட்டியைச் சேர்ந்த பாலாஜிக்கு சொந்தமான சாய்நாத் பயர் ஒர்க்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பொம்மையாபுரத்தில் உள்ளது. இந்த ஆலை நாக்பூர் லைசென்ஸ் பெற்று 84 அறைகளுடன் பேன்சி ரக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது.
ஆலையில் நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு மணி மருந்து கலக்கும் போது உராய்வினால் விபத்து ஏற்பட்டது. இதில் அறை இடிந்து விழுந்தது. அருகே இருந்த சி.சி.டிவி கேமரா அறை சேதமானது.
இதில் அருப்புக்கோட்டை சிவக்குமார் 56, மீனாட்சிசுந்தரம் 46, குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன் 54, காமராஜ் 54, வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன் 54, செட்டிகுறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் 37, பலியாகினர். படுகாயமடைந்த ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் 20, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாலாஜி, உள்குத்தகைதாரர் சசிபாலன், நிரஞ்சனா தேவி, மேற்பார்வையாளர் சதீஷ்குமார், போர்மேன்கள் கணேசன், பிரகாஷ், பாண்டியராஜ் ஆகியோர் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.
போலீசார் கூறியதாவது: சாய்நாத் பயர் ஒர்க்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆவணங்களை ஆய்வு செய்ததில் உரிமையாளர் பாலாஜி, சிவகாசி வனிதா பயர் ஒர்க்ஸ் உரிமையாளர்கள் சசிபாலன், மனைவி நிரஞ்சனா தேவி ஆகியோர் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் லைசென்ஸ் பெயர் மாறாமல் இருந்ததும் தெரிந்தது. உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், நிரஞ்சனா தேவி எழுதப்படாத ஒப்பந்தத்தில் உள்குத்தகையாக ஆலையை நடத்தி வந்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே கணேசன் 39, சதீஷ்குமார் 24, கைது செய்யப்பட்டனர். இதில் உள்குத்தகை உரிமையாளர் சசிபாலன் 53, நேற்று கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர் என்றனர்.

