/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சமுதாயக் கூடங்கள் குறித்த சட்டசபை அறிவிப்பு செயலாளருக்கு எஸ்.சி., ஆணையம் நோட்டீஸ்
/
சமுதாயக் கூடங்கள் குறித்த சட்டசபை அறிவிப்பு செயலாளருக்கு எஸ்.சி., ஆணையம் நோட்டீஸ்
சமுதாயக் கூடங்கள் குறித்த சட்டசபை அறிவிப்பு செயலாளருக்கு எஸ்.சி., ஆணையம் நோட்டீஸ்
சமுதாயக் கூடங்கள் குறித்த சட்டசபை அறிவிப்பு செயலாளருக்கு எஸ்.சி., ஆணையம் நோட்டீஸ்
ADDED : பிப் 01, 2025 02:09 AM
விருதுநகர்,:தமிழகத்தில் 2021-22ம் ஆண்டு சட்டசபை மானிய கோரிக்கையில் ரூ.25 கோடிக்கு 20 ஆதிதிராவிட சமுதாயக் கூடங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை நிதி எதுவும் ஒதுக்காமல் வெறும் முன்மொழிவுகளோடு நிற்கின்றன. இது குறித்து விருதுநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் பீமாராவ் தேசிய எஸ்.சி., ஆணையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்க ஆதிதிராவிட நலத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆதிதிராவிட மக்களின் இல்லத் திருமணங்கள், இதர சுபநிகழ்ச்சிகள், சடங்குகளை நடத்தஆதிதிராவிடர் பழங்குடியின நல அமைச்சர் கயல்விழி, சட்டசபையில் 2021-22 மானிய கோரிக்கை எண் 4ன் படி ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் 20 சமுதாயக்கூடங்கள் ரூ.25 கோடிக்கு கட்டப்படும் என அறிவித்தார்.
அதற்கேற்ப மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருந்து 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தாட்கோ மேலாண்மை இயக்குனரிடம் இருந்து திட்ட மதிப்பீடு கேட்கப்பட்டது.
மணமகன், மணமகள் அறைகள், மணமேடை, விசாலமான பார்வையாளர்கள் அரங்கம், குளியலறை, குடிநீர் தொட்டி, பாத்திரங்கள், உணவு மேஜை, நாற்காலிகள் ஆகிய வசதிகளுடன் ஒரு சமுதாயக்கூடத்திற்கு ரூ.1.25 கோடி மதிப்பில் மொத்தம் 20 சமுதாயக்கூடங்களுக்கு ரூ.25 கோடிக்கு கட்ட திருத்திய முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.
விழுப்புரம், பெரம்பலுார் ,திருவாரூர், திண்டுக்கல், திருவள்ளூர், விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, துாத்துக்குடி என பல்வேறு மாவட்டங்களில் 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் தற்போது வரை நிதி எதுவும் ஒதுக்கப்படாததால் பணிகள் துவங்காமலே உள்ளன.
இந்நிலையில் இது குறித்து சமூக ஆர்வலர் பீமாராவ், தேசிய எஸ்.சி., ஆணையத்திற்கு புகார் அளித்தார்.
இது குறித்து ஆதிதிராவிட நலத்துறை செயலாளர்15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.