/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையின் வார்டில் கத்தியுடன் நோயாளியை தேடிய 4 மர்மநபர்கள் கேள்விக்குறியான நிலையில் பாதுகாப்பு

ADDED : ஆக 30, 2025 11:55 PM
விருதுநகர்:விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு நுரையீரல் உள்நோயாளிகள் பிரிவில் 4 மர்மநபர்கள் கத்தியுடன் உள்ளே புகுந்தனர். வார்டில் நாங்கள் தேடி வந்த ஆள் இல்லை' என தெரிவித்து சென்ற சம்பவத்தால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தினசரி வெளிநோயாளிகளாக 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்குள்ள 1250 படுக்கைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மருத்துவமனை வளாகத்தில் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அருகே நுரையீரல் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இந்த வார்டில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மேல் இரு டூவீலரில் வந்த 4 மர்மநபர்கள் அருகே வாகனத்தை நிறுத்தினர். கத்தியுடன் வார்டிற்குள் புகுந்து நோட்டமிட்டு ஒருவரை தேடியுள்ளனர்.
செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் கேட்டதற்கு நாங்கள் தேடி வந்த ஆள் இங்கு இல்லை' எனக்கூறி ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் வெளியே சென்றனர். இதனால் அச்சமடைந்து வார்டு கதவை அடைத்தனர்.
இதே போன்ற சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் நடந்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கிழக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆராய்ந்து கத்தியுடன் வந்த மர்மநபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் பற்றாக்குறையால் பாதுகாப்பு பணியாளர்களில் சிலர் மட்டுமே இரவு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் கத்தியுடன் வந்து சென்ற மர்மநபர்களால் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பது தெளிவாக தெரிகிறது.
எனவே விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் கூடுதல் போலீசாரை காலை, இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.