/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குண்டாற்றில் சீமை கருவேல மரங்கள்
/
குண்டாற்றில் சீமை கருவேல மரங்கள்
ADDED : ஜூன் 17, 2025 06:47 AM
காரியாபட்டி; குண்டாற்றில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஆறு இருக்கும் அடையாளமே தெரியாமல் உள்ளது. அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உருவாகி தேனி, மதுரை, விருதுநகர் வழியாக செல்லும் குண்டாறு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. காரியாபட்டி திருச்சுழி பகுதியில் ஆற்றுப் பாசனத்தை நம்பி 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆங்காங்கே வரத்துக் கால்வாய் ஏற்படுத்தி கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றது. ஒரு முறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போதும், கண்மாய் நிரம்பி இரு போகம் நெல் விவசாயம் நடைபெறும்.
இந்நிலையில் ஆற்றில் கிடந்த மணல் அள்ளப்பட்டு ஆறு பள்ளமானது. ஆறு கட்டாந்தரையாக மாறி சீமை கருவேல மரங்கள் முளைக்க துவங்கின. சென்னம்பட்டி கால்வாய் பகுதியில் இருந்து மாவட்ட எல்கை வரை உள்ள குண்டாறு பகுதியில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, ஆறு இருக்கும் அடையாளமே தெரியாமல் போனது. ஆக்கிரமிப்பால் ஆறு சுருங்கி வருகிறது.
மழை நேரத்தில் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டாலும் வரத்து கால்வாய்களில் தண்ணீர் செல்ல வழி இன்றி வீணாக கடலில் கலந்து வருகிறது. கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
விளை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி விவசாயம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது ஆங்காங்கே அணைக்கட்டுகள் கட்டப்பட்டு வருகின்றன. மழை நீரை தேக்கினாலும் வரத்து கால்வாயில் செல்லுமா என்பது சந்தேகமே. ஆற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்தி நீர் வரத்து கால்வாய்கள் வழியாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.