/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பார்மலின் கலந்த மீன்கள் பறிமுதல்
/
பார்மலின் கலந்த மீன்கள் பறிமுதல்
ADDED : மே 24, 2024 01:57 AM
மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் ஆகிய நகர் பகுதிகளில் ஐஸ்பார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்பார்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மீன், பழச்சாறு, பூ கடைகள் வைத்திருப்பவர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வரும் மீன்களை விருதுநகர் மாவட்டத்தில் நகர், புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மீன்கள் விரைவில் கெட்டு போகாமல் இருக்க கடை உரிமையாளர்கள் மொத்தமாக ஐஸ்பார்களை வாங்கி உடைத்து அதன் மூலம் மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை காந்தி நகர், பாலையம்பட்டி, காரியப்பட்டி பகுதிகளில் பார்மலின் திரவத்தை பனிக்கட்டியில் கலந்து மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 45 கிலோ மீன்களை மீன் துறை, உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கண்டறிந்து பறிமுதல் செய்து அழித்தனர்.
மனித உடல்களை பிணவறையில் கெட்டுப் போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் திரவத்தை உண்ணும் உணவுப்பொருள்களில் கலந்து விற்பனை செய்வது அதிகாரிகள் ஆய்வு செய்தால் மட்டுமே கண்டறிய முடியும்.
இது போன்று பார்மலின் திரவம் கலந்து விற்பனை செய்யப்படும் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதை கண்டறிய அதிகாரிகள் தொடர் ஆய்வுகள் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் மீன்களில் பார்மலின் திரவம் கலந்து விற்பனை செய்வதை கண்டறிவது எப்படி என மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் மீன்களில் பார்மலின் கலந்து விற்பனை செய்வதை கண்டறிய தனி குழு அமைத்து மாவட்டம் முழுவதும் தொடர் ஆய்வுகளை செய்ய வேண்டும்.