ADDED : மார் 15, 2024 06:26 AM
காரியாபட்டி : காரியாபட்டியில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேர்தலை முன்னிட்டு பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில், தொகுதி பொறுப்பாளர் வெற்றிவேல் முன்னிலையில் நடந்தது.
தொகுதி பொறுப்பாளர் விஜய ரகுநாதன் ராமநாதபுரம் தொகுதியில் பணிகள் செய்ய வேண்டிய நிர்வாகிகள் பட்டியலை வாசித்து அறிமுகம் செய்தார்.  அப்போது நரிக்குடி நெல்லிகுளத்தைச் சேர்ந்த பா.ஜ., மூத்த நிர்வாகி வேலு, நான் கட்சியில 20 ஆண்டுகளாக இருக்கேன், நேத்து வந்த எல்லா பேரையும் சொல்றீங்க.  என் பெயரை ஏன் சொல்லவில்லை. என்ன கூட்டம் நடத்துறீங்க.
சீனியருக்கு மரியாதை இல்லையா என கேட்க அவருக்கு ஆதரவாகவும்  சிலர் குரல் கொடுத்தனர். அவரை மாவட்ட தலைவர் சமாதானப்படுத்தி முன் வரிசையில் அமர வைத்தார். மறுபடியும் வேலு சத்தம் போட்டு இடையூறு ஏற்படுத்தி கொண்டே இருந்தார். ஆத்திரமடைந்த  நிர்வாகிகள் சிலர் அவரை தாக்கியதால்,  சலசலப்பு ஏற்பட்டது. கூட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தொண்டர்களை சமாதானப்படுத்தி ஒரு வழியாக கூட்டத்தை முடித்தார்.

