/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கழிவுகள் அடைப்பட்டு கிடக்கும் நீர்வரத்து ஓடை
/
கழிவுகள் அடைப்பட்டு கிடக்கும் நீர்வரத்து ஓடை
ADDED : பிப் 14, 2024 05:54 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 20வது வார்டில் கழிவுகள் கொட்டப்பட்டும், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் நீர்வரத்து ஓடை, தினசரி தூய்மை பணி நடக்காததால் கொசு தொல்லை அதிகரிப்பு, நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டும், வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வாழைகுளம் தெரு, மாதாங்கோவில் தெரு, செட்டியக்குடி கடலைக்கார தெரு, திருமுக்குளம் கிழக்கு கரை பகுதிகளை கொண்டது இந்த வார்டு. இதில் வாழைகுளம் தெரு நுழைவுப் பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வாறுகாலில் செல்கிறது. மெயின் ரோட்டில் உள்ள வாறுகாலின் தடுப்புசுவர் போதிய உயரமின்றி காணப்படுகிறது. குப்பை, கழிவுகள் சேர்ந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.
வாழைகுளம் தெரு மேற்கு பகுதியில் இருந்து பெரியகுளம் கண்மாய் நீர்வரத்து பாதைக்கு செல்லும் ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்தும், கழிவுகள் கொட்டப்பட்டும் பாலத்தின் கண்கள் அடைப்பட்டு கிடக்கிறது. மாதாங்கோயில் தெருவில் பேவர்பிளாக் ரோடு சுத்தமாக இருந்தாலும் தெருக்களின் உட்பகுதியில் தினசரி தூய்மை பணி நடக்காததால் கொசு தொல்லை மாலை நேரங்களில் அதிகளவில் காணப்படுகிறது.
மாதாங்கோவில் தெரு மாநில நெடுஞ்சாலைத்துறை பாலத்தில் கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டும், தள்ளுவண்டி, கார்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதால் அவ்வழியாக செல்லும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். செட்டியக்குடி தெருகிழக்கு பகுதியில் இருந்து துடியாண்டி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள பாலத்தில் சுகாதாரக் கேடு காணப்படுகிறது.

