/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சத்துணவு கூடம் முன் தேங்கும் கழிவுநீர்
/
சத்துணவு கூடம் முன் தேங்கும் கழிவுநீர்
ADDED : டிச 07, 2024 05:32 AM

சாத்துார்: கீழ ஒட்டம்பட்டியில் சத்துணவு கூடத்தின் முன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சிறுவர்கள் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியம் சிந்தப் பள்ளி ஊராட்சி கீழ ஒட்டம்பட்டியில் பழைய காலனி, புதிய காலனி ஆகிய நகர்கள் உள்ளன.
கீழ ஒட்டாம்பட்டியில் வீடுகளின் கழிவு நீர் சத்துணவு கூடத்தின் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. சிறிய மழை பெய்தாலும் மழை நீரும் கழிவு நீரும் கலந்து நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
அங்கன்வாடி பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் பெற்றோரும் சாக்கடையில் கால் வைத்து நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள வாறுகால் இணைக்கப்படாமல் துண்டாகி கிடப்பதால் கழிவுநீர் வாறு காலிலேயே தேங்கி நிற்கிறது.
கழிவு நீர் மக்கள் நடந்து செல்லும் பாதையில் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பயணிகள் நிழற்குடை இல்லை.
வெளியூர் செல்லும் பயணிகள் மரத்தடி நிழலில்காத்திருந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுகாதார வளாகம்இல்லாததால் திறந்த வெளியை நாடும் நிலை உள்ளது.
துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பழைய காலனி பகுதியில் விளையாட்டு திடலில் முள் செடி வளர்ந்து புதர் போல் உள்ளதால் இளைஞர்களால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
வாறுகாலை சுத்தம் செய்ய மாதம் ஒருமுறை மட்டுமே துப்புரவு பணியாளர்கள் வருகின்றனர். இதற்குள்ளாக குப்பை குவிந்து விடுவதால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது.
வாறுகால் தேவை
முருகேஸ்வரி, குடும்பத் தலைவி: ஊருக்கு நடுத்தெருவில் வாறுகால் வசதி இல்லை. கழிவு நீர் செல்ல வழி இன்றி பாதையில் ஓடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. வாறுகால் கண்மாய் வரை கட்டியிருந்தனர். தற்போக சிலர் வாறு காலை ஆக்கிரமித்து தடுத்து உள்ளனர் .ஆக்கிரமிப்பு அகற்றி வாறுகால் கட்ட வேண்டும். நடுத்தெருவில் ரோடு போட வேண்டும்.
குழந்தைகள் பாதிப்பு
ராஜஸ்வரி, குடும்பத் தலைவி: சத்துணவு மையம் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சத்துணவு மையத்திற்கு செல்லும் குழந்தைகள் சாக்கடையில் கால் வைத்து நடப்பதால் காலில் சொறி சிரங்கு போன்ற நோய் ஏற்படுகிறது. மக்களே பணம் திரட்டி இந்த பகுதியில் இரண்டு முறை மண் அடித்து சுத்தம் செய்தோம். ஆனால் மீண்டும் கழிவு நீர் தேங்குகிறது. கழிவுநீர் தேங்காத வகையில் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேஷன் கடை அவசியம்
ஜெயப்பிரியா, குடும்பத் தலைவி: கீழ ஒட்டம்பட்டி, பழைய புதிய காலனி பகுதியில் மட்டும்200க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன.இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள முத்தால் நாயக்கன்பட்டிக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. நடந்தே சென்று பொருட்கள் வாங்கி திரும்புவதால் மிகுந்த சிரமமாக உள்ளது. கீழ ஒட்டம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும்.
கழிப்பறை இல்லை
முத்து, குடும்பத் தலைவி: கீழ ஒட்டம்பட்டியில் மட்டும் சமுதாய கூடம் கட்டி உள்ளனர். பழைய காலனி புதிய காலனி பகுதியில் சமுதாயக்கூடம் இல்லை.
இளைஞர்கள் விளையாடுவதற்காக இங்கு விளையாட்டு திடல் அமைத்துக் கொடுத்தனர். தொடர் பராமரிப்பு இல்லாததால் தற்போது முன் செடி முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. ஆண்கள் பெண்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.