/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடியில் அ.தி.மு.க.,வினர் மோதலில் துப்பாக்கிச்சூடு: கிளைச்செயலாளர் கைது
/
நரிக்குடியில் அ.தி.மு.க.,வினர் மோதலில் துப்பாக்கிச்சூடு: கிளைச்செயலாளர் கைது
நரிக்குடியில் அ.தி.மு.க.,வினர் மோதலில் துப்பாக்கிச்சூடு: கிளைச்செயலாளர் கைது
நரிக்குடியில் அ.தி.மு.க.,வினர் மோதலில் துப்பாக்கிச்சூடு: கிளைச்செயலாளர் கைது
ADDED : டிச 28, 2024 01:34 AM

நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி தற்போதைய அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சந்திரனுக்கும், முன்னாள் ஒன்றிய செயலாளர் பூமிநாதனின் ஆதரவாளர் பிரபாத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரபாத் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நரிக்குடி ஒன்றிய அ.தி.மு.க.,வினர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் தலைமையில் இரு அணிகளாக செயல்படுகின்றனர். ராஜேந்திர பாலாஜி அணியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் பூமிநாதன் மாற்றப்பட்டு, ராஜவர்மன் ஆதரவாளர் சந்திரனுக்கு அப்பொறுப்பு தற்போது வழங்கப்பட்டது. இதனால் 2 அணியினருக்கும் கருத்து வேறுபாடு நிலவியது.
விளம்பரங்கள், சமூக வலைதளங்களில் ஒன்றிய செயலாளர் என பூமிநாதன் பதிவிட்டு வந்தார். இதற்கு தற்போதைய ஒன்றிய செயலாளர் சந்திரன் எதிர்ப்பு தெரிவித்து ராஜேந்திர பாலாஜியை விமர்சனம் செய்தார். பூமிநாதன் அதற்கு காரசாரமாக பதிலளித்திருந்தார்.
ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொருளாளர் பிரபாத், பூமிநாதனுக்கு ஆதரவாக பதிவிட்டார். இதுதொடர்பாக அலைபேசியில் சந்திரன், பிரபாத் கடுமையாக பேசினர்.
நேற்று காலை ஒன்றிய செயலாளர் சந்திரன் உள்ளிட்ட 10 பேர் ஆயுதங்களுடன் நரிக்குடி கல்விமடையில் பிரபாத் வீட்டுக்கு சென்றனர். அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. சந்திரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் பிரபாத் மகன் மிதின் சக்கரவர்த்தியை தாக்கி, மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். தற்காப்புக்காக பிரபாத் வைத்திருந்த லைசென்ஸ் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். சந்திரன் தரப்பினர் தப்பி ஓடினர்.
வி.ஏ.ஓ., ரகுநாதன் அ.முக்குளம் போலீசில் புகார் கொடுத்தார். பிரபாத் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். ஒன்றிய செயலாளர் சந்திரன் உட்பட 5 பேர் மீது பிரபாத் தனியாக புகார் கொடுத்தார். சந்திரன் ஆதரவாளரான தாமரைக்குளம் கிளை செயலாளர் தனுஷ்கோடியை போலீசார் கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.
4 புல்லட்கள் மிஸ்சிங்: பிரபாத் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் 49 புல்லட்டுகள் இருக்க வேண்டும். போலீஸ் விசாரணையில் ஒன்று சுட்டது போக 45 இருப்பதாக அவர் கூறினார். மீதமுள்ள 4 புல்லட்டுகள் மிஸ்சிங் குறித்தும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரபாத் கருப்பு பெட்டி என்ற சினிமாவிலும் நடித்துள்ளார்.