/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கடைகள் ஆக்கிரமிப்பு, ஆட்டோக்களால் நெருக்கடி
/
கடைகள் ஆக்கிரமிப்பு, ஆட்டோக்களால் நெருக்கடி
ADDED : ஆக 30, 2025 05:40 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முக்கிய குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் முடங்கியார் ரோட்டில் ஆட்டோக்கள், சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பதால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
ராஜபாளையம் நகர் பகுதி நடுவே காந்தி சிலை ரவுண்டானா முதல் தாலுகா அலுவலகம் வரை உள்ள முடங்கியார் ரோடு அதிகாரிகளின் மெத்தனத்தால் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி சுருங்கிவிட்டது. இதனால் மக்கள் தினமும் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாக வருகின்றனர். முடங்கியார் ரோட்டில் இருந்து குமரன் தெரு, ரைஸ் மில் ரோடு, பெரிய கடை பஜார், சுரைக்காய் பட்டி, சம்மந்தபுரம், மாணிக்கத்தான் ரோடு, தெற்கு அக்ரஹாரம், மாடசாமி கோவில் தெரு என பல்வேறு கிளை தெருக்களுக்கு முக்கிய பாதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இதன் நுழைவு பகுதியான தனியார் சந்தை முன்பு ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாக சாலையின் வெள்ளை கோடு மேல் வரை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஏற்கனவே இந்த இடம் குடியிருப்புகள் பள்ளி கல்லுாரி மாணவர்கள் கடக்கும் இடமாக இருந்து வருகிறது. இங்கு தனியார் சந்தை, உழவர் சந்தை, அரசு கால்நடை மருத்துவமனை அருகருகே அமைந்துள்ளது.
அலுவலக நேரங்களில் போட்டி போட்டுக் கொண்டு ரோட்டை ஆக்கிரமித்து நிற்பதால் டூவீலரில் செல்வோர், பாதசாரிகள், பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளும் முளைத்து நிரந்தர இடமாக மாற்றி வைத்துள்ளனர். இதனால் கடைகளுக்கு வருவோர் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்வதும், வரிசையாக பார்க்கிங் பகுதிகளாக மாற்றியும் வருகின்றனர்.
பொன்விழா மைதானம் முன்புள்ள மெயின் ரோட்டில் தள்ளுவண்டி கடைகளை நிறுத்தி நிரந்தர கடைகளாக மாற்றி விட்டனர். போஸ் பார்க் முன்பு மூங்கில் கடை ஆக்கிரமித்து ரோட்டின் ஒரு பகுதியை சுருக்கி விட்டனர். அலுவலக பள்ளி நேரங்களில் மாணவர்கள் இப்பகுதியை கடக்கும் போதும் பாதுகாப்பற்ற நிலையை சந்திக்க வேண்டி உள்ளது.
பொது போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் நிலையை பல ஆண்டுகளாக அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் சாலையின் ஒரு பகுதியே அகலம் குறைந்து கேட்பாரற்ற நிலையாகிவிட்டது. குறிப்பிட்ட சிலரின் வாழ்வாதாரம் என்ற பெயரில் பொதுமக்களின் அடிப்படை உரிமையான தடையற்ற போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து முறைப்படுத்த வேண்டும்.