ADDED : நவ 28, 2024 04:51 AM
விருதுநகர்: விருதுநகரில் வியாபாரிகள் சார்பில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து வாடகை ஒப்பந்த தொகையின் மேல் 18 சதவீத ஜி.எஸ்.டி., முழுவதும் நீக்கிட வலியுறுத்தி நவ.29ல் கடையடைப்பு நடக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்திய வாடகை ஒப்பந்த தொகையின் மேல் 18 சதவீத ஜி.எஸ்.டி., வசூல் முறையால் சொந்த கடை இல்லாமல் மாத வாடகைக்கு கடை, கோடவுன் எடுத்து தொழில் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வாடகை தொகை உயர்ந்து வியாபாரிகள், மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் நவ. 29ல் முழு நேர கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு விருதுநகர் வியாபார தொழில்துறை சங்கம், மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம், சுமை துாக்கும் தொழிலாளர் சங்கம் என அனைத்து வியாபாரிகள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாப்பட்டி, சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் ஆகிய நகர், அதனை சுற்றிய பகுதிகளில் முழுநேர கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
விருதுநகர் மெயின் பஜார் வியாபாரிகள் சங்க செயலாளர் வெற்றி கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்திய வாடகை ஒப்பந்த தொகையின் மேல் 18 சதவீத ஜி.எஸ்.டி., முழுவதுமாக நீக்கிட வலியுறுத்தி நவ. 29ல் விழிப்புணர்வு முழு கடையடைப்பு நடத்தப்படவுள்ளது, என்றார்.