/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளிகளில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை: மாணவர்கள் நோயால் பாதிக்கும் அபாயம்
/
பள்ளிகளில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை: மாணவர்கள் நோயால் பாதிக்கும் அபாயம்
பள்ளிகளில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை: மாணவர்கள் நோயால் பாதிக்கும் அபாயம்
பள்ளிகளில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை: மாணவர்கள் நோயால் பாதிக்கும் அபாயம்
ADDED : ஆக 09, 2025 11:32 PM

மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் துாய்மை பணியாளர்களை நிர்ணயிக்க அரசு நிர்ணயித்துள்ள தொகை மிக குறைவானதாக உள்ளது. அதாவது ஒரு துாய்மை பணியாளருக்கு மாத ஊதியமாக துவக்கப்பள்ளிக்கு ரூ.1000ம், நடுநிலைப்பள்ளிகளில் ரூ.1500ம், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ரூ.3000ம் ஊதியத்திற்கான தொகையாக அரசு வழங்குகிறது.
தன்னார்வ அமைப்புகள் மூலம் புதிய பாரத திட்டம், வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் உள்ள உறுப்பினர்களை துாய்மை பணியாளர்களாக எடுத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டங்கள் தற்போது பெரிய அளவில் செயல்பாட்டில் இல்லை. இதனால் தலைமை ஆசிரியர்கள் தாங்களே தேடி துாய்மை பணியாளர்களை நியமித்தனர். இதில் 10 சதவீத பள்ளிகளில் மட்டும் தற்போது வரை துாய்மை பணியாளர்கள் பணியில் செயல்படுகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் குறைவான ஊதியம் காரணமாக துாய்மை பணியாளர்கள் பணியை விட்டு வெளியேறி விட்டனர்.
மாதம் ஒரு முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ பள்ளிக்கு வந்து கழிப்பறையை மட்டும் சுத்தம் செய்து விட்டு செல்கின்றனர். வகுப்பறைகள், அலுவலக அறைகளை சுத்தம் செய்வது கிடையாது. மேல்நிலைப்பள்ளிகளில் என்றால் இந்த நிலை இன்னும் மோசமாக உள்ளது. சுகாதார குறைபாடு பெரும் தொல்லையாக உள்ளது. அரசு 30 மாணவர்கள் உள்ள பள்ளிக்கும் 300 மாணவர்கள் உள்ள பள்ளிக்கும் ஒரே நிதியை தருகிறது என தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: துாய்மை பணியாளர்கள் நியமிக்க அரசு கூறுகிறது. ஆனால் தினசரி அவர்கள் வர வைப்பதில் ஊதியம் பெரிய பிரச்னையாக உள்ளது. இவ்வளவு குறைவான ஊதியத்திற்கு தினசரி பள்ளிக்கு வர முடியாது என்கின்றனர். மேலும் வந்தாலும் கழிப்பறைகளை சுத்தம் செய்கின்றனர். வளாகங்கள், வகுப்பறைகளை சுத்தம் செய்வதில் சுணக்கம் நீடிக்கிறது.
அரசு தரும் சுகாதார பராமரிப்பு நிதி போதுமானதாக இல்லை. மழைக்காலம் வந்தால் மாணவர்கள் சுகாதார தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த நிதியை சரியாக தராமல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தருவதும் வாடிக்கையாக உள்ளது, என்கின்றனர்.