/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை
/
ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை
ADDED : செப் 29, 2024 05:07 AM
மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தலைமை மருத்துவமனை, தாலுகா தோறும் அரசு மருத்துவமனைகள், அதிக மக்கள் கொண்ட கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், குறைந்த அளவு மக்கள் வசிக்கும் பகுதிகளில் துணை சுகாதார நிலையங்கள் உள்ளது. இதன் மூலம் கிராமப்புற மக்கள் மருத்துவ உதவிகளை பெற்று வருகின்றனர்.
ஆனால், இத்தகைய மருத்துவ மனைகளில் வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அளவிற்கு டாக்டர்கள் இல்லாத நிலை, மகப்பேறு, குழந்தைகள் நலம், எலும்பு முறிவு, இதயம், டயாலிசிஸ் உட்பட பல்வேறு சிறப்பு பிரிவுகளுக்கு போதிய அளவிற்கு டாக்டர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது.
பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்த வங்கி, லேப் வசதிகள் என பல்வேறு கட்டமைப்புகள் இருக்கும் நிலையிலும் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதியளவிற்கு செவிலியர்கள், மருந்தாளுஞர்கள், எக்ஸ்ரே எடுப்பவர்கள், ஆய்வக உதவியாளர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் சிகிச்சை பெற வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் முழு நேர மருத்துவர்கள் இல்லாததால் கிராமப்புற மக்கள் இரவு நேரங்களில் நகர் பகுதிக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இங்கு பணியாற்றும் பெண் மருத்துவர்கள் அடிக்கடி அயல் பணி களுக்கு அனுப்பப்படுவதால் கிராம மக்கள் அவசர நேரங்களில் சிகிச்சை பெற முடியாத நிலை காணப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் டாக்டர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. இதேபோல் டயாலிசிஸ் பிரிவிற்கும் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.
வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை,நவீன வசதிகள் இல்லாதநிலை, கட்டடங்கள் பழுது உட்பட பல்வேறு குறைபாடுகள் உள்ளது. சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் செயல்பட்டு வந்த அம்மா கிளினிக்குகள் மூடப்பட்ட நிலையில் அங்கு ஒரு அரசு, தனியார் மருத்துவர் என யாருமே கிடையாது. இதே நிலை புதுப்பட்டி பேரூராட்சியிலும் காணப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவிற்கான நவீன கட்டடம் கட்டப்பட்டு இன்னும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதில் ஆர்வம் காட்டும் மக்கள் பிரதிநிதிகள் அங்கு பணியாற்ற போதிய அளவிற்கு டாக்டர்கள் நர்சுகள் மருத்துவ உதவியாளர்கள் நியமிப்பதற்கு குரல் கொடுக்காமல் உள்ளனர்.
எனவே, மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இருந்து நகர் பகுதி வரை உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் போதிய அளவிற்கு டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களின் உதவியுடன் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக போதியளவிற்கு சிறப்பு மருத்துவர்கள் இருப்பதை மாவட்ட நிர்வாகமும் உறுதிப்படுத்த வேண்டும்.
மாவட்டத்தில் காணப்படும் காலி பணியிடங்களை முழு அளவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.