/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் பற்றாக்குறை--
/
டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் பற்றாக்குறை--
டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் பற்றாக்குறை--
டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் பற்றாக்குறை--
ADDED : அக் 19, 2024 04:44 AM
ராஜபாளையம் : நவீன வசதிகள் இருந்தும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் பற்றாக்குறை உட்பட ராஜபாளையம் அரசு மருத்துவமனை பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
ராஜபாளையம் அரசு மருத்துவமனை நகர் பகுதியில் மகளிர், குழந்தைகளுக்கு என தனியாகவும்தென்காசி ரோட்டில் பொது மருத்துவமனை எனவும் இரண்டு அரசு மருத்துவமனைகளில் 212 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன.
தினமும் வெளி நோயாளிகளாக 1000 பேர் வருகின்றனர் உள் நோயாளிகளாக 212 படுக்கைக்கு பதில் 250 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
அதிகமான கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு வருவதால் நகராட்சி மூலம் கட்டப்பட்டுள்ள நோயாளிகளின் உதவியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் கேரள மாநிலம் செல்லும்தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.
நவீன தலைக்காய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாததால் முதல் உதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்கு மதுரைக்கும், விருதுநகருக்கும், திருநெல்வேலிக்கும் பரிந்துரைக்க வேண்டி உள்ளது.
தற்போது ரூ.40 கோடியில் 230 படுக்கை வசதியுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 6 டாக்டர்கள்பற்றாக்குறை உள்ள நிலையில் இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டில் கொண்டு வர மேலும் 49 டாக்டர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.
அத்துடன் கட்டட வசதிகளுக்கு ஏற்ப போதிய சிறப்பு டாக்டர்கள் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் பணியமர்த்த வேண்டும். ரேடியாலஜி நிபுணர் இல்லாததால் சிறப்பு சிகிச்சைக்கு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டி உள்ளது.
பொது மருத்துவமனையில் செயல்படும் சித்த மருத்துவ பிரிவு சிறப்பு சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ள ஆயில் மசாஜ் உபகரணங்கள், நீராவி சிகிச்சை பொருட்கள், இதற்கான படுக்கை வசதி, நோயாளிகளுக்கானபயிற்சி உபகரணங்கள் காட்சி பொருளாக போடப்பட்டுள்ளது.
காந்தி சிலை ரவுண்டானா அருகே உள்ள மகளிர் மருத்துவமனையில் தென்காசி, திருநெல்வேலி, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமானோர் பிரசவத்திற்கு வருகின்றனர்.
பச்சிளம் குழந்தை சிறப்பு பிரிவு நோயாளிகள்,குழந்தைகளின் சிகிச்சைக்கு சேர்க்கும் உறவினர்கள் தங்கும் இடமின்றி மருத்துவமனை வளாகங்களில் காத்திருக்க வேண்டி உள்ளது. சுற்றி திரியும் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
மருத்துவமனை முன்பு மலையடிப்பட்டியில் இருந்து வரும் கழிவு நீர் கடக்கும் பகுதியாக இருப்பதால் இதை ஒட்டியுள்ள பாலப்பகுதியில் எப்போதும் பிளாஸ்டிக் குப்பைகளுடன் கழிவுநீர் தேங்கி சுகாதார கேட்டினை ஏற்படுத்துகிறது.
மகப்பேறு மருத்துவமனை நுழைவு பகுதிகளில் வைக்கப்படும் விளம்பர போர்டுகளால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உள்நுழைய முடிவதில்லை. தனியாரின்முயற்சியால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடையையும் அரசியல்வாதிகள் பின்பற்றுவது இல்லை.
நோயாளிகளின் நிலை கேள்விக்குறி
செல்வகுமார், சமூக ஆர்வலர்: சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இல்லாததால் அவசர காலத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை உள்ளது. கால தாமதத்தால் நோயாளிகளின் நிலை கேள்விக்குறியாகிறது.
அதிகரித்து வரும் நோயாளிகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஏற்ப டாக்டர்கள், செவிலியர்கள்,சிறப்பு அலுவலர்கள் நியமிக்க கோரிக்கை வைத்தும் தீர்ந்தபாடில்லை. நோய்களுக்கு நேர பாகுபாடு இல்லை. எனவே 24 மணி நேரமும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. சுகாதாரமான குடிநீருக்கு பற்றாக்குறை, மழைக்காலங்களில் கழிவு நீர் தேக்க தொந்தரவு சரி செய்ய வேண்டும்.
தீர்வு
புதிய மருத்துவமனை கட்டடத்தை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இல்லாததால் மீதம் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கிறது. எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் வதி ஏற்படுத்த வேண்டும். பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும்.அரசு மருத்துவமனை ஒட்டிய கழிவுநீர் வாறுகாலை அகலப் படுத்துவதுடன் எதிரே தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்ற மாற்று வழி காண வேண்டும்.