/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை; பணிகளில் தொய்வு
/
அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை; பணிகளில் தொய்வு
அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை; பணிகளில் தொய்வு
அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை; பணிகளில் தொய்வு
ADDED : ஆக 19, 2025 12:33 AM
விருதுநகர்; விருதுநகர் அரசு மருத்துவமனையின் தனியார் ஒப்பந்த ஊழியர்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவமனை 2022 ஜன. 12ல் திறக்கப்பட்ட போது 640 படுக்கைகள் இருந்தது. நோயாளிகளின் வருகை அதிகரிப்புக்கு ஏற்ப படிப்படியாக படுக்கைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு தற்போது 1250 படுக்கைகளுடன் செயல்படுகிறது.
மருத்துவமனையில் துாய்மை உட்பட பல்வேறு பணிகளில் ஊழியர்களை நியமித்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கான காலக்கெடு முடிந்து வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் 132 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் மருத்துவமனையின் சலவை, வெளிநோயாளிகள் பிரிவு, வார்டு, ரத்த வங்கி, ஆப்ரேஷன் தியேட்டர் உள்பட பல்வேறு பணிகளுக்கு தற்போது போதிய பணியாளர்கள் இல்லாமல் கடந்த மூன்று மாதங்களாக பற்றாக்குறை நிலவுகிறது.
மேலும் ஒரு ஊழியர் இரு வெளிநோயாளிகள் பிரிவையும், இரண்டு, மூன்று வார்டுகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிறும் வார்டுகள், அனைத்து பகுதிகளையும் கிருமி நாசினி கொண்டு முழுமையாக சுத்தம் செய்வது வழக்கம். நேற்று முன்தினம் பணியாளர்கள் பலர் உடல்நிலை சரியில்லாததாலும், பணிகள் அதிகமாக இருக்கும் என்பதாலும் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்துக்கொண்டனர்.
இதனால் அன்று வார்டுகள், அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்ய ஊழியர்கள் இல்லாமல் பணிகளை செய்வதில் தொய்வு ஏற்பட்டது. மேலும் சில செவிலியர்கள் தங்கள் பணிகளை செவிலியராக படிக்கும் மாணவிகள், வார்டு பணியாளர்களை வைத்து செய்தனர். ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது ஒப்பந்த பணியாளர்களை உணவு உட்கொள்வதற்கான நேரம் கூட வழங்காமல் வார்டுகளில் ஒரு சில செவிலியர்கள் அதிக வேலை வாங்குவதால் அனைவருக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.
அதிக பணியால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டிய நிலையில் ஊழியர்கள் ஆளாகி வருகின்றனர். ஒப்பந்தம் மாறிய பின் ஏற்பட்ட அதிக பணிச்சுமையால் தற்போது ஒவ்வொரு மாதமும் பணியில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே விருதுநகர் அரசு மருத்துவமனையில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக தனியார் ஒப்பந்த பணியாளர்களை நியமித்து தற்போது ஏற்பட்டுள்ள பணிச்சுமை பிரச்னை, பணிகளில் ஏற்படும் தொய்வு ஆகியவற்றை சரிசெய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.