முதல்வர் மருந்தகத்தில் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு: தனியாரில் அதிக விலைக்கு வாங்கும் பரிதாபம்
முதல்வர் மருந்தகத்தில் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு: தனியாரில் அதிக விலைக்கு வாங்கும் பரிதாபம்
UPDATED : அக் 20, 2026 04:59 PM
ADDED : அக் 20, 2026 04:44 PM
அருப்புக்கோட்டை: தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காததால் ஏழை மக்கள் தனியாரிடத்தில் அதிக விலை கொடுத்து வாங்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சி காலத்தில் 2025, பிப்.ல் முதல்வர் மருந்தகங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது. மலிவு விலையில் மக்களுக்கு தட்டுப்பாடின்றி மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதே முதல்வர் மருந்தகத்தின் நோக்கம். இந்த மருந்தகங்களில் 200 க்கும் மேற்பட்ட
ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பொதுவான நோய்களுக்கு மலிவு விலைகளின் மருந்துகள் கிடைக்கின்றன. இந்த வகை மருந்துகள் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் ஏழை மக்களுக்கு நன்கு பயன்பட்டு வந்தது. சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் ஒரு மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலையில், முதல்வர் மருந்தகத்தில் 500 க்கும் குறைவான விலையில் கிடைத்தது.
இந்நிலையில், 5 மாதங்களாக முதல்வர் மருந்தகங்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் விநியோகம் செய்யாததால், மக்கள் மருந்துகள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். தினமும் நோயாளிகள் மருந்துகளை கேட்டு அலைந்து வருகின்றனர். எப்போது கிடைக்கும் என்றும் அங்குள்ள பணியாளர்களால் கூற முடியவில்லை.
வேறு வழியின்றி தனியார் மருந்தகங்களில் அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். ஏழை மக்கள் மருந்துகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்க முடியாது என, மருந்துகளின் அளவை குறைத்துக் கொள்கின்றனர்.
அருப்புக்கோட்டையில் 2, பந்தல்குடி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் மருந்தகங்கள் உள்ளன. இவற்றில் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாட்டால் ஏழை மக்கள் மருந்துகள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு உயிர் காக்கும் மருந்துகளின் உடனடியாக முதல்வர் மருந்தாகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
