ADDED : டிச 06, 2024 05:09 AM

காரியாபட்டி: கழுவனச்சேரி கண்மாய்க்கு செல்லும் வரத்துக் கால்வாயில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால், சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி பகுதியில் பல்வேறு கண்மாய்களுக்கு நீர் ஆதாரமாக சென்னம்பட்டியில் அணை கட்டப்பட்டது. மழை நேரங்களில் கிடைக்கும் வெள்ள நீர், வரத்து கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. கால்வாயில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி கிடந்தது.
பல்வேறு கோரிக்கைகளுக்குப் பின் சில ஆண்டுகளுக்கு முன் தூர்வாரப்பட்டது. அதற்குப்பின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது தண்ணீர் எளிதில் சென்றது.
இந்நிலையில் கழுவனச்சேரி கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயில் மீண்டும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.
குப்பை கொட்டப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கால்வாயில் தண்ணீர் வந்த போது கூட எளிதில் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கியதால், கண்மாய் நிரம்பாமல் போனது. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதும், விவசாயமும் பாதிக்கப்பட்டது.
மழை நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது எளிதில் தண்ணீர் வந்து சேர வரத்துக் கால்வாயில் புதர்மண்டி கிடக்கும் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.