/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிரமத்தில் சிவஞானபுரம் ஊராட்சி மக்கள்
/
சிரமத்தில் சிவஞானபுரம் ஊராட்சி மக்கள்
ADDED : ஜூன் 24, 2024 01:34 AM
விருதுநகர் : வாறுகால் இல்லாததால் கழிவு நீர் செல்ல முடியாமல் வீட்டின் அருகே தேங்கி நின்று துார்நாற்றம், ரோடு சீரமைக்காததால் மழையில் சேறும், சகதியுமாகி வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை, குப்பை சரியாக அகற்றாததால் சுகாதாரக்கேடு என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சி வள்ளுவர் தெரு, தபால் தந்தி காலனி தெரு, என்.ஜி.ஒ., காலனி தெரு மக்கள்.விருதுநகர் அருகே சிவஞானபுரம் ஊராட்சியில் நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து மக்கள் தொகையும் பெருகி வருகிறது. இங்கு உள்ள வள்ளுவர் தெருவில் ரோட்டின் இருபுறமும் வாறுகால் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சரியாக வெளியேற்ற முடியாததால் சிலர் வீட்டின் அருகே சிறிய பள்ளம் தோண்டி, அதில் கழிவு நீர் செல்லும் படி செய்துள்ளனர்.வெயில் காலத்தில் பள்ளத்தில் உள்ள கழிவு நீர் வற்றி விடுகிறது. ஆனால் மழை நேரத்தில் மழை நீருடன், கழிவு நீர் கலந்து துார்நாற்றத்துடன் ரோட்டில் ஆறாக ஓடுவதால் வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் லோக்சபா தேர்தலுக்கு முன்பே துவங்கப்பட்டு பணிகள் முடிந்து தற்போது குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.ஆனால் அதற்காக தோண்டப்பட்ட ரோடு முழுவதும் சேதமாகியுள்ளது. இந்த ரோடு மழையில் சேறும், சகதியுமாகி வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. தபால் தந்தி காலனி, என்.ஜி.ஒ., காலனி தெருக்களில் குப்பையை சரிவர துாய்மை பணியாளர்கள் பெறுவதில்லை. மேலும் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை முறையாக அகற்றி சுத்தம் செய்வதில்லை.
சேதமான ரோட்டால் அவதிஜல் ஜீவன் திட்டத்திற்காக ரோட்டின் நடுவே குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்து, குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது எல்லாம் முடிந்தும் ரோடு அமைப்பதற்கான பணிகள் துவங்கவில்லை. மக்கள் சிரமமின்றி செல்ல புதிய ரோடு அமைக்க வேண்டும்.- கனி, தனியார் ஊழியர்.
வாறுகால் அவசியம்வள்ளுவர் தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல முறையான வாறுகால் வசதி இல்லாமல் சிலர் வீட்டின் அருகே சிறிய பள்ளம் தோண்டி, அதில் செல்லும் படி வைத்துள்ளனர். எனவே உள்ளாட்சி நிர்வாகம் வாறுகால் வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.- ரெங்கசாமி, அரசு ஊழியர் ஓய்வு.குப்பையால் சுகாதாரக்கேடுவீடுகளில் சேரும் குப்பையை பெற்று செல்ல துாய்மை பணியாளர்கள் சரிவர வராததால் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள குப்பைத் தொட்டியில் கொட்டுகின்றனர். வீடுகள், குப்பைத் தொட்டியில் சேரும் குப்பையை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அசோக், தனியார் ஊழியர்.