/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி, திருமங்கலம் பஸ்கள் புது பஸ் ஸ்டாண்ட்டை புறக்கணிப்பு
/
சிவகாசி, திருமங்கலம் பஸ்கள் புது பஸ் ஸ்டாண்ட்டை புறக்கணிப்பு
சிவகாசி, திருமங்கலம் பஸ்கள் புது பஸ் ஸ்டாண்ட்டை புறக்கணிப்பு
சிவகாசி, திருமங்கலம் பஸ்கள் புது பஸ் ஸ்டாண்ட்டை புறக்கணிப்பு
ADDED : அக் 17, 2024 05:06 AM
30 ஆண்டுகளாக செயல்படாத விருதுநகர்புது பஸ் ஸ்டாண்ட் இந்தாண்டு ஆக.21 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. துவக்கம் முதலே பஸ் ஸ்டாண்டிற்கு எதிர்ப்பு நிலவி வந்தது. மீனாம்பிகை பங்களா வழியாக பஸ்கள் இயக்க வேண்டும் என ஒரு தரப்பு கோரிக்கை வைத்து வந்தது.
அது வரை பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்குகோரிக்கை வைத்த நல அமைப்பினர் சிலர் மீனாம்பிகை பங்களா வழியாக பஸ்கள் வந்து செல்லவும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் இவர்களது கோரிக்கையை ஏற்று நேற்று முன் தினம் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்டிற்கு சிவகாசி, திருமங்கலம் பஸ்கள் மீனாம்பிகை பங்களா வழியாக இயக்கப்படும் என வழித்தட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
அதாவது திருமங்கலம் டவுன் பஸ்கள் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் துவங்கி, கருமாதி மடம், ஆத்துப்பாலம், பழைய பஸ் ஸ்டாண்ட், கள்ளிக்குடி வழியாக திருமங்கலம்செல்ல வேண்டும். மீண்டும் அதே வழித்தடத்தில் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் வர வேண்டும்.
திருமங்கலம் புறநகர் பஸ்கள் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் துவங்கி கருமாதி மடம், ஆத்துப்பாலம், மீனாம்பிகை பங்களா, கள்ளிக்குடி, திருமங்கலம் - மதுரை செல்ல வேண்டும். மீண்டும் மதுரையிலிருந்து அதே வழித்தடத்தில் மதுரையிலிருந்து விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் வர வேண்டும்.
இதே போல் சிவகாசி பஸ்கள் நந்தா ஓட்டல், எம்.ஜி.ஆர்., சாலை - புது பஸ் ஸ்டாண்ட், கருமாதி மடம், ஆத்துப்பாலம், மீனாம்பிகை பங்களா, கள்ளிக்குடி வழியாக மதுரை செல்லவேண்டும்.மீண்டும் மதுரையில் இருந்து அதே வழித்தடத்தில் சிவகாசி செல்ல வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
புறக்கணிக்கும் அரசு பஸ்கள்
இந்நிலையில் நேற்று காலை முதலே பஸ்கள் சரிவர வாரமல் இருந்தன. புது பஸ் ஸ்டாண்டில் இருந்து காலை 5:30 மணிக்கு புறப்பட வேண்டிய திருமங்கலம் பஸ் காலை 11:10 மணிக்கு தான் வந்து சேர்ந்தது. அதுவரை மீனாம்பிகை பங்களா, பழைய பஸ் ஸ்டாண்டில் ஆட்களை ஏற்றி சென்று விட்டது.
அதேபோல் எம்.ஜி.ஆர்., சாலை வழியாக வர வேண்டிய சிவகாசி பஸ்கள்நேராக மீனாம்பிகை பங்களா, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது. புது பஸ் ஸ்டாண்ட் செல்லவில்லை.
முடங்கும் அபாயம்
இவ்வாறு சிவகாசி பஸ்கள் எம்.ஜி.ஆர்., சாலையை புறக்கணிப்பது நாளடைவில் மக்கள் புது பஸ் ஸ்டாண்டிற்கு வருவதன் நம்பிக்கையை குறைக்கும். அருகே உள்ள மீனாம்பிகை பங்களா, பழைய பஸ் ஸ்டாண்டிலே பஸ் ஏறி கொள்ளலாம் என்ற மனநிலையை உருவாக்கும். இதனால் மீண்டும் புது பஸ் ஸ்டாண்ட் முடங்கும்.
மீனாம்பிகை பங்களா நிறுத்த கோரிக்கை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டும், அதை மீறி எம்.ஜி.ஆர்., சாலை வழித்தடத்தை புறக்கணிப்பதும், திருமங்கலம் பஸ்கள் வராமல் இருப்பதும் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆய்வுக்கு பின் இயக்கம்
இதே போல் காலை 11:00 மணிக்கு ராஜபாளையம் பஸ் ஒன்றே ஒன்று மட்டும் வருவதால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கூடுதல் பஸ்கள் வர ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு போக்குவரத்து கழகம் வழக்கம் போல் ஒத்துழைப்பு தரவில்லை. இதை நல அமைப்பினரும் தட்டி கேட்பதில்லை.
நேற்று காலை 11:00 மணிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோவின் கள ஆய்வுக்கு பின் பஸ்கள் வந்து சென்றன. இருப்பினும் வரும் நாட்களில் இது மீண்டும் அரங்கேற வாய்ப்புள்ளது.
போக்குவரத்து கழக பொதுமேலாளர் துரைசாமி கூறியதாவது:
பஸ்கள் சரியாக இயங்குவது சரிபார்க்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய வழித்தடங்களில் பஸ்கள் செல்வது தொடர்ந்து கண்காணிக்கப்படும், என்றார்.