/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மந்தம்
/
நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மந்தம்
ADDED : டிச 24, 2024 04:10 AM
விருதுநகர்: தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் மந்தம் ஏற்பட்டுள்ளது. குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு விட்ட பின் உரமாக்கும் பணிகளும் குறைந்துள்ளதாக மக்கள் புகார் அளிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் படி குப்பை பெறப்பட்டு அவை மக்கும், மக்காத என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பையை உரமாக்கவும், மக்காத குப்பையை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பவும் வேண்டும். நகராட்சிகளில் குப்பை கிடங்கு இருக்க கூடாது என அரசு பயோமைனிங் செய்து வருகிறது.
2022ல் குப்பை அள்ளும் பணியை ஒப்பந்த நிறுவனங்களுக்கு விட்டு தனியார் மூலம் குப்பை அள்ளும் பணியை நகராட்சி நிர்வாகங்கள் செய்து வருகின்றன. இதற்கு பின் நகராட்சி பகுதிகளில் இயங்கும் உரமாக்கல் மையங்கள், வள ஆதார மையங்களில் முன்பு போல் உரமாக்கும் பணிகள் நடப்பதில்லை.
குப்பையை பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் முழுவீச்சில் நடப்பதில்லை. தற்போது குப்பை வாங்கும் பணிகள் நடக்கிறது. எடை போட்டு டன்னுக்கு இவ்வளவு என நகராட்சிகளுக்கு ஏற்ப பணம் வழங்கப்படுகிறது.
இதை தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் முறைப்படி திடக்கழிவு மேலாண்மை செய்கின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டியது சுகாதார ஆய்வாளர்களின் பணி. ஆனால் நகராட்சிகளின் பணிவரன்முறை செய்யப்பட்ட போது சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் குறைக்கப்பட்டது. கடும் பணிச்சுமையுடன் பணிபரியும் இவர்கள் இதை கண்காணிக்க முடியாமல் திணறுகின்றனர். இதனால் அனைத்து உரமாக்கல் மையங்களும் பெயருக்கு தான் செயல்படுகின்றன. எனவே நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த நகராட்சிகள் நிர்வாக ஆணையரகம் முன்வர வேண்டும்.