/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாமிரபரணி தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் ஸ்ரீவி., மக்கள்
/
தாமிரபரணி தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் ஸ்ரீவி., மக்கள்
தாமிரபரணி தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் ஸ்ரீவி., மக்கள்
தாமிரபரணி தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் ஸ்ரீவி., மக்கள்
ADDED : பிப் 23, 2024 05:27 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தாமிரபரணி தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் குடிநீர் சப்ளை நாட்கள் அதிகரிப்பதை தவிர்க்க கூடுதலாக புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2011 க்கு முன்பு வரை ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் மக்களின் குடிநீர் தேவை, உள்ளூர் நீராதாரமான செண்பகத் தோப்பு பேயனாற்றில் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால், அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் காரணமாக எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 2011ல் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி தினமும் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்பட்டு சப்ளை செய்ய வேண்டிய நிலையில், இத்திட்டம் துவங்கிய நாள் முதல் குழாய் உடைப்பு மின்தடை உட்பட பல்வேறு காரணங்களால் தினமும் 30 முதல் 37 லட்சம் லிட்டர் தண்ணீரே கிடைத்தது. இதனால் நகரில் தினமும் குடிநீர் சப்ளை நடக்கவில்லை. மழைக்காலத்தில் 5 நாட்களுக்கு ஒரு முறையும், கோடைகாலத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் சப்ளை செய்யும் நிலை உள்ளது.
தற்போது தாமிரபரணி தண்ணீர் வரத்து சீராக கிடைக்காததால், உள்ளூர் செண்பகதோப்பு தண்ணீரும், தாமிரபரணி தண்ணீரும் கலந்து 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
தற்போது நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையிலும், மக்கள் தொகை எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடக்கும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கென புதிய குடிநீர் திட்டம் அவசியமாகிறது.
இது குறித்து நகராட்சி தலைவர் ரவிக்கண்ன் கூறியதாவது: தற்போது கூட்டுக் குடிநீர் திட்ட மூலம் தாமிரபரணி தண்ணீர் வருவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு பாதியளவு தண்ணீரே வருகிறது. வீடுகள் மற்றும் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தினமும் 90 லட்சம் லிட்டர் தாமிரபரணி தண்ணீர் கிடைக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கென தனியாக புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இது குறித்து அமைச்சர்கள், நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர் நடவடிக்கை எடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும், என்றார்.