/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
/
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஜூலை 29, 2025 05:18 AM

ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. கோவிந்தா, கோபாலா கோஷம் விண்ணதிர முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு 16 வண்டி சப்பரம் நடந்தது. ஜூலை 24 காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு ஐந்து கருட சேவையும், ஜூலை 26 இரவு ஆண்டாள், ரெங்கமன்னார் சயனசேவையும் நடந்தது. முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நேற்று காலை நடந்தது.நேற்று அதிகாலை ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து ஸ்ரீரங்கம் பெருமாள், மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு கொண்டுவரப்பட்ட பரிவட்டம், புடவை, மாலைகள் சாற்றப்பட்டு பிரம்ம முகூர்த்தத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் தேரில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
காலை 9:06 மணிக்கு அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
விழாவில் எம்.எல்.ஏ., ஸ்ரீவில்லிபுத்துார் மான்ராஜ், நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், கலெக்டர் சுகபுத்ரா, எஸ்.பி., கண்ணன், அனைத்து அரசு துறை அதிகாரிகளும், திரளான பக்தர்களும் பங்கேற்றனர்.நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேர் மதியம் 1:06 மணிக்கு நிலைக்கு வந்தது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா, அறங்காவலர்கள், செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். டி.எஸ்.பி., ராஜா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

