/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை
/
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை
ADDED : நவ 03, 2025 12:00 AM
சாத்துார்: சாத்துார் அரசு மருத்துவமனையில் நிரந்தர பணியாளர்கள் பலர் ஓய்வு பெற்று விட்ட நிலையில் பணியில் இருப்பவர்கள் கூடுதல் வேலைப்பளுவால் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாத்துார் அரசு மருத்துவமனை பழைய டிரங்க் ரோட்டில் மகப்பேறு மருத்துவமனையாகவும் இங்கு ரத்த வங்கியும் ,குழந்தைகள் பராமரிப்பு பிரிவு செயல் பட்டு வருகிறது. வெங்கடாசலபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் புற நோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவும் அவசர கால சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருகிறது.
சாத்துார் சுற்றியுள்ள கிராம மக்களும் சிவகாசி அனுப்பங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களும் சாத்துார் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மினி பஸ் வந்து செல்லும் வகையில் வசதியாக இந்த அரசு மருத்துவமனை அமைந்திருப்பதால் சிவகாசி பகுதி மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக 18 பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் வார்டுகளை சுத்தம் செய்வது, கழிவறையை சுத்தம் செய்வது, காலை மதியம் மாலை நேரங்களில் நோயாளிகளுக்கு உணவு, சிற்றுண்டி தயாரித்து தருவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர்.
சுழற்சி முறையில் 18 பேர் தொடர்ந்து பணிபுரிந்ததால் நோயாளிகளுக்கும் நல்ல உணவு வழங்கப்பட்டது. சுத்தமாக பராமரிக்கப்பட்டதால் அரசு மருத்துவமனை மாநில மற்றும் மத்திய அரசின் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றது.இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக பணியில் இருந்த 14 நிரந்தர பணியாளர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.
தற்போது 4 பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் 14 பேர் செய்து வந்த பணியை செய்ய வேண்டிய நிலையில் பணிச்சுமைக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து மருத்துவமனை பராமரிப்பு பணி, சமையல் பணி என பல்வேறு பணிகளை செய்து வருவதால் மன அழுத்தத்திற்கும் ஆளாகி வரு கின்றனர்.
பல ஆண்டுகளாக காலிப் பணி இடங்களாக உள்ள நிரந்தர பணியாளர் இடங்களை அரசு நிரப்ப வில்லை. தனியார் ஒப்பந்த பணியாளர்களை வைத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கும் மிக குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுவதால் அடிக்கடி விடுப்பு போட்டு வெளி வேலைக்கு சென்று விடுகின்றனர்.
வாரிசு அடிப்படை யிலும் பணி நியமனம் செய்யப்படவில்லை.இதனால் அரசு மருத்துவமனையில் பராமரிப்பில் சுணக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. சாத்துார் அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தேவையான நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

