/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேங்கும் கழிவுநீர், குடிநீர் தட்டுப்பாடு, நாய் தொல்லை; விருதுநகர் ரோஜா நகர் குடியிருப்போர் அவதி
/
தேங்கும் கழிவுநீர், குடிநீர் தட்டுப்பாடு, நாய் தொல்லை; விருதுநகர் ரோஜா நகர் குடியிருப்போர் அவதி
தேங்கும் கழிவுநீர், குடிநீர் தட்டுப்பாடு, நாய் தொல்லை; விருதுநகர் ரோஜா நகர் குடியிருப்போர் அவதி
தேங்கும் கழிவுநீர், குடிநீர் தட்டுப்பாடு, நாய் தொல்லை; விருதுநகர் ரோஜா நகர் குடியிருப்போர் அவதி
ADDED : ஆக 20, 2025 07:16 AM

விருதுநகர்; வாறுகால் இல்லாததால் குடியிருப்பை சுற்றி தேங்கும் கழிவுநீர், இருள் சூழ்ந்த தெருக்களால் அல்லல், நாய், பன்றிகள் தொல்லை, குடிநீர் தட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்னைகளால் விருதுநகர் ரோஜா நகர் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
விருதுநகர் பாவாலி ஊராட்சி ரோஜா நகரை சேர்ந்த அன்வர், நாச்சியாக்கனி, காயத்ரி, எல்சிதாஸ், கனகவள்ளி, ஜெஸிமா பானு ஆகியோர் கூறியதாவது: ரோஜா நகர் முதல் தெருவில் ரோடு போடப்பட்டு பாதியில் விடப்பட்டுள்ளது. ஒரு பகுதி மண் ரோடாகவும், மற்றொரு பகுதி ரோடாகவும் உள்ளது. 2024ல் சில தெருக்களில் மட்டும் ரோடு வசதி ஏற்படுத்தப்பட்டது.
அப்போதே வாறுகால் அமைத்து விட்டு ரோடு போடுங்கள் என கூறியும் ஊராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இதன் வேதனையை தற்போது அனுபவிக்கிறோம். நாங்கள் வசிக்கும் பகுதி களிமண் தரை என்பதால் உறிஞ்சிக்குழி அமைத்தாலும், அது உறிஞ்சாமல், தேங்கியே நிற்கிறது. இதனால் நாளடைவில் கழிவுநீர் அருகில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை பெரிய பிரச்னையாக உள்ளது. இன்றுடன் குடிநீர் வினியோகித்து 27 நாட்கள் ஆகிறது. மினிலாரி குடிநீரை வாங்கி அருந்துகிறோம். 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து ஒரே லைனில் குடிநீர் வருகிறது.
அதை மூன்று லைனாக பிரித்து அனைத்து தெருக்களுக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் வினியோகித்தால் இந்த பிரச்னை இருக்காது.
இப்பகுதிக்கு போலீசார் ரோந்து வருவதே கிடையாது. இதனால் கஞ்சா, மதுவுக்கு அடிமையானோரின் தொல்லை தாங்க முடியவில்லை. தெருவிளக்குகள் எதுவும் எரியாதது அவர்களுக்கு வசதியாக உள்ளது. கோயில் அருகே அமர்ந்து மது அருந்துகின்றனர். பெண்கள் வெளியில் நடமாட முடியவில்லை. தெருவில் நாய்த்தொல்லையும், காலிமனை பகுதிகளில் பாம்பு போன்ற விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. பன்றிகள் வீதிகளை வலம் வருவதால் சுத்தம், சுகாதாரமற்ற நிலை உள்ளது.
இங்கு குப்பையை அகற்றுவதே இல்லை. மழைக்காலங்களில் இங்குள்ள மண் ரோடுகளால் மக்கள் சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடமும், உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் புகார் அளித்துவிட்டோம். எந்த பலனுமில்லை. மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனமெடுத்து இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும், என்றனர்.