/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காலிப் பணியிடங்களால் வரிவசூல் தேக்கம்
/
காலிப் பணியிடங்களால் வரிவசூல் தேக்கம்
ADDED : செப் 29, 2024 05:54 AM
சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் வருவாய் அலுவலர், பில் கலெக்டர்கள் காலி பணியிடங்களால் வரி வசூல் தேக்கமடைந்துள்ளது. இதனால் ரூ.24 கோடி அளவுக்கு வரி வசூல் ஆகாததால், பொது நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் பாதிப்படைந்துள்ளது.
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு 2021ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிவகாசி மாநகராட்சியில் 55,058 சொத்து வரியினங்கள் மூலம் ரூ.18.38 கோடி, 2084 காலிமனை வரியினங்கள் மூலம் ரூ.51.73 லட்சம், 2,991 தொழில் வரியினங்கள் மூலம் ரூ.69.62 லட்சம், 19,798 குடிநீர் இணைப்பு மூலம் ரூ.1.59 கோடி, 55,029 குப்பை வரியினங்கள் மூலம் ரூ.1.48 கோடி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்கள் மூலம் மொத்தம் ரூ. 24.48 கோடி அளவிற்கு வரி வருவாய் கிடைக்கிறது.
மாநகராட்சிக்கு சொந்தமான 257 கடைகள் மூலம் ரூ.1.25 கோடி வரியற்ற வருவாய் கிடைக்கிறது. மாநகராட்சியில் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் உள்ள வரி நிலுவைத் தொகை ரூ.9.59 கோடியில் இந்த ஆண்டு ரூ.38 லட்சம் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக சேர்த்து மாநகராட்சியில் ரூ.24 கோடி அளவுக்கு வரி வசூலிக்கப்படாமல் உள்ளது.
மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளர் பணியிடம் பல மாதங்களாக காலியாக இருப்பதாலும், ஏற்கனவே நகராட்சியாக இருந்தபோது 15 பில் கலெக்டர்கள் இருந்த நிலையில், தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் 48 வார்டுகளைக் கொண்ட சிவகாசி மாநகராட்சியில் ஒரு பில் கலெக்டர் 5 க்கும் அதிகமான வார்டுகளை கவனிப்பதால் வரிவசூல் தேக்கமடைந்துள்ளது.
வரி வருவாய் தான் மாநகராட்சி பொது நிதியின் மூல ஆதாரமாக உள்ளது. பொது நிதியிலிருந்து மாநகராட்சி பணியாளர்களுக்கு ஊதியம், மின் கட்டணம், ரோடு சீரமைத்தல், மாநகராட்சி கட்டடங்கள் மராமத்து, குடிநீர் குழாய் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரி வசூல் பாதிப்பு காரணமாக பொது நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
இதனால் பொது நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு, பில் தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால், பொது நிதியில் டெண்டர் விடப்பட்ட பணிகளை செய்வதற்கு, ஒப்பந்ததாரர்கள் முன் வராததால் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே மாநகராட்சி வருவாய் பிரிவிற்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து, நிலுவை வரியை வசூலிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.