/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாய் நீர்வரத்து ஓடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை
/
கண்மாய் நீர்வரத்து ஓடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை
கண்மாய் நீர்வரத்து ஓடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை
கண்மாய் நீர்வரத்து ஓடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை
ADDED : மே 26, 2024 03:36 AM
மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியான தேவதானத்தில் துவங்கி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், நெடுங்குளம், பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் பகுதிகளிலும், ஒவ்வொரு தாலுகாவிலும் கண்மாயை சார்ந்துள்ள வயல்களிலும் நெல் விவசாயம் அதிகளவில் நடந்து வருகிறது.
இதேபோல் மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் மானவாரி நிலங்களில் மக்காச்சோளம், கம்பு போன்ற பயிர்களும் ஆண்டுதோறும் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் மேற்கு பகுதி கண்மாய்கள் முழு அளவில் நிரம்பி கிழக்கு பகுதி கண்மாய்க்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
பிளவக்கல், கோவிலாறு அணைகள் நிரம்பி, அங்கிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் வத்திராயிருப்பு தாலுகா கண்மாய்கள் நிரம்பி, பல ஆண்டுகளுக்குப் பிறகு சிவகாசி தாலுகா கண்மாய்களுக்கும் தண்ணீர் சென்றது.
தற்போதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து கண்மாயிலும் ஓரளவுக்கு தண்ணீர் உள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை பெய்யும் போது கூடுதல் தண்ணீர் வரத்து ஏற்படும் நிலை உள்ளது.
ஆனால் பல தாலுகாக்களில் கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து ஓடைகளில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியும், குப்பைகள் கொட்டப்பட்டும், அடைபட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் காணப்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்யவில்லை எனில் கனமழை பெய்தால் குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடமலை குறிச்சியிலிருந்து செங்குளம் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஓடையில் கைகாட்டி கோயில் பஜார் அருகில் நகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு நீர்வரத்து ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக, அக்கண்மாய் பாசன விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதேநிலை மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும் பெரும்பாலான கண்மாய் நீர்வரத்து பாதைகளில் காணப்படுகிறது.
எனவே, தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கு முன்பே மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய் நீர்வரத்து ஓடைகளை சுத்தம் செய்தும், சேதமடைந்த தடுப்புச் சுவர்களை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.