/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய குடிநீர் திட்டங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
/
புதிய குடிநீர் திட்டங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய குடிநீர் திட்டங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய குடிநீர் திட்டங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ADDED : டிச 29, 2024 04:00 AM
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சி, 9 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 450 ஊராட்சிகள் உள்ளன.இவற்றின் கீழ் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் பல ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ளூர் நீராதாரங்கள் மூலம் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
ஆனால், ஆண்டுக்காண்டு மக்கள் தொகை அதிகரித்து வந்த நிலையில் உள்ளூர் நீராதாரத்தின் மூலம் போதிய அளவு குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை உருவானது.
இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாயும் தாமிரபரணி ஆற்றில் முக்கூடல், வல்லநாடு பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வரும் வகையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு நகர் பகுதியில் குடிநீர் வழங்கப்பட்டது.
பின்னர் கிராமங்களிலும் தாமிரபரணி குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், அடிக்கடி குழாய் உடைப்பு, மின்தடை ஆகியவற்றின் காரணமாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சீரான நாட்களில் தாமிரபரணி கூட்டு குடிநீர் சப்ளை முறையாக மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் நகர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய் விலை கொடுத்து வாங்கும் நிலை தற்போதும் காணப்படுகிறது.
அதே நேரம் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் போதியளவிற்கு தாமிரபரணி குடிநீர் கிடைக்காமல் உள்ளூர் நீர் ஆதாரத்துடன் கலந்து சப்ளை செய்யப்படும் நிலை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளில் காணப்படுகிறது.
இந்த ஊரக பகுதி உள்ளாட்சி அமைப்புகளில் சப்ளை செய்யப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் காணப்படுவதால் அதனை சமையலுக்கோ, குடிப்பதற்கோ மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.
உவர்ப்பு தன்மை குடிநீரால் நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
இதனை தவிர்க்க தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்கள் மூலம் சப்ளை செய்யப்படும் குடிநீரை ஒரு குடம் தண்ணீர் ரூ. 12 கொடுத்து விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது. இதனால் கூலி தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, மாவட்டத்தில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்பட்டு மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தாமிரபரணி தண்ணீர் கிடைத்திட மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ள குடிநீர் ஆதாரங்களில் ஆர்.ஓ. பிளாண்டுகள் பொருத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு கிடைத்திட வழி செய்ய வேண்டும் என்பது விருதுநகர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.