/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி அணையில் தெரு விளக்குகள் சேதம்
/
இருக்கன்குடி அணையில் தெரு விளக்குகள் சேதம்
ADDED : ஜூலை 26, 2025 11:25 PM
சாத்துார்:இருக்கன்குடி அணையில் தெரு விளக்குகள் சேதம் அடைந்து இருள் சூழ்ந்து காணப்படும் நிலையில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க புதிய தெரு விளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருக்கன்குடியில் வைப்பாறு அர்ச்சுனா நதி களுக்கு இடையில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர் பாசனம் மூலம் 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த காலங்களில் இருக்கன்குடி அணையை அழகு படுத்துவதற்காக அரசு நிதி ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து கரைகள் பலப்படுத்தப்பட்டன.மேலும் அணையின் கரை பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டது.
இரவு நேரத்திலும் அணை மக்களுக்கு அழகாக காட்சி தருவதற்காக கரை பகுதி முழுவதும் எல்.இ.டி தெரு விளக்குகள் பொருத்தப்பட்டது. முன்னதாக அணை திறக்கப்பட்டபோது பொருத்தப்பட்டிருந்த மெர்குரி விளக்குகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திய பின்னர் புதியதாக எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டது.
இந்த எல். இ .டி., விளக்குகளையும் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி விட்டனர். இதனால் இரவு நேரத்தில் அணைப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது.
தற்போது ஆடி மாதம் என்பதால் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தபடி உள்ளனர்.இவர்கள் இரவு நேரத்தில் அணைக்கட்டு பகுதியை சுற்றி பார்க்க செல்கின்றனர்.
அணைப்பகுதிக்குள் நுழைவதற்கு பொதுப்பணி துறையினர் தடை விதித்துள்ள போதும் தடையை மீறி பலர் அணைப்பகுதிக்கு சென்று சுற்றி பார்த்து வருகின்றனர். இரவு நேரத்தில் இப்பகுதிக்கு செல்பவர்கள் போதுமான வெளிச்சம் இல்லாததால் சமூக விரோதிகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளது.
இரவு நேரத்தில் இப்பகுதிக்கு ரோந்து செல்லும் போலீசாரும் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே அணைப்பகுதியில் சேதமடைந்துள்ள மின்விளக்குகளை மீண்டும் சீரமைத்து எறிய செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.