/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ் இல்லாததால் 1.5 கி.மீ., நடக்கும் மாணவர்கள்
/
பஸ் இல்லாததால் 1.5 கி.மீ., நடக்கும் மாணவர்கள்
ADDED : அக் 19, 2024 04:43 AM
காரியாபட்டி : காரியாபட்டி ஆத்திகுளத்திற்கு பஸ் வசதி இல்லாததால்1.5 கி.மீ., நடந்து சென்று பஸ் ஏறி திருச்சுழிக்கு சென்று மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால் திருச்சுழி செல்லும் பஸ்களை ஊருக்குள் வந்து செல்ல மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி ஆத்திகுளத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். பெரும்பாலானவர்கள் வெளியூர்களுக்கு கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஊரிலிருந்து திருச்சுழி மெயின் ரோட்டிற்கு 1.5 கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் பிடிக்க வேண்டி உள்ளது.
வயதானவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து செல்ல பெரிதும் சிரமப்படுகின்றனர். மழை, வெயில் நேரங்களில் நடந்து செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறத்திலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் காட்டுப் பன்றிகளால் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
பெண்கள் தனியாக சென்று வர முடியவில்லை. ஆத்திர அவசரத்திற்கு எங்கும் செல்ல வர முடியாத நிலை இருந்து வருவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
காரியாபட்டியில் இருந்து திருச்சுழி செல்லும்பஸ்களை ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் காலை, மதியம், மாலை வேளை இயக்கினால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி வேலைக்கு சென்று வருபவர்கள் என பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அக்கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

