/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடர்ந்து கல்வி கற்றால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்
/
தொடர்ந்து கல்வி கற்றால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்
தொடர்ந்து கல்வி கற்றால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்
தொடர்ந்து கல்வி கற்றால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்
ADDED : ஏப் 20, 2025 03:15 AM

சிவகாசி: தொடர்ந்து கல்வி கற்றால் மட்டுமே வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று வெற்றி பெற முடியும், என சிவகாசி பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்களின் வெள்ளிவிழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்களின் வெள்ளிவிழாவில் கல்லுாரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். டீன் மாரிசாமி வாழ்த்தினார்.
விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசியதாவது: அனைவருக்கும் கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்களை அமைப்பதன் மூலம் நமது நாட்டை உயர்த்த முடியும். நழுவ விட்ட நேரம், தவறவிட்ட வாய்ப்பு, பேசிய வார்த்தைகள் ஆகிய மூன்று தாரக மந்திரங்களை கடைபிடித்தால் மாணவர்கள் வாழ்வில் முன்னேற முடியும். நாம் தற்போது இருக்கும் காலம் விரைவாக நகர்ந்து செல்லக்கூடியது.
மாணவர்கள் எண்ணங்களை சிதறவிடாமல் வரும் வாய்ப்பையும் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடிக்காமல் முன்னேற வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகில் தொடர்ந்து கல்வி கற்றால் மட்டுமே வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று வெற்றி பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குனர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: மனிதன் கல்வி கற்றதால் மட்டுமே அடிமைத்தனத்திலிருந்து மீண்டு சுதந்திரமான ஒரு வாழ்க்கை வாழ முடிகிறது. கல்வி அறிவு இருந்தால் தான் நமக்கு மரியாதை என்று கூறிய பாரதியார், திருவள்ளுவர் கூற்றுக்கு இணங்க தற்போது வீதிகள் தோறும் பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள் இருப்பதால் தனி மனிதனின் வருமானம் உயர்ந்து மனிதவள குறியீட்டில் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது, என்றார்.
பல்கலை தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள், கல்லுாரிக்கு விடுமுறை எடுக்காமல் 100 சதவீதம் வருகை தந்த மாணவர்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்த மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.
மத்திய மாநில அரசு நிதி அமைப்புகளிடமிருந்து நிதியுதவி பெற்ற பேராசிரியர்கள் மாணவர்கள், சிறந்த ஆய்வு கட்டுரைகள் வெளியிட்ட பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் பேராசிரியர்கள் அலுவலக உதவியாளர்கள் செய்தனர்.

