/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விதி மீறி பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் அவதி; கிராம ரோடுகள் சேதமாவதால் பல லட்சம் வீண்
/
விதி மீறி பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் அவதி; கிராம ரோடுகள் சேதமாவதால் பல லட்சம் வீண்
விதி மீறி பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் அவதி; கிராம ரோடுகள் சேதமாவதால் பல லட்சம் வீண்
விதி மீறி பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் அவதி; கிராம ரோடுகள் சேதமாவதால் பல லட்சம் வீண்
ADDED : அக் 14, 2024 04:06 AM
மாவட்டத்தில், திருச்சுழி, கல்லுாரணி, ஆலடிபட்டி, எம்.ரெட்டியாபட்டி, வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கல், கிராவல் குவாரிகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. கனிம வளங்களை எடுத்துச் செல்ல டாரஸ் லாரிகளை பயன்படுத்துகின்றனர். 3, 6, 8, 10, 12 யூனிட் வரை கனிமங்களை எடுத்துச் செல்கின்றனர்.
அதேபோல் சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி, பட்டாசு, ஸ்பின்னிங், ஜின்னிங் மில்கள் உள்ளிட்ட ஆலைகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இத்தொழிலில் ஈடுபடுகின்றன. இரவு பகல் பாராது 24 மணி நேரமும் விதிகளை மீறி அதிக பாரங்களை எடுத்துச் செல்கின்றனர்.
இதற்கு பெரும்பாலும் கிராமப்புற ரோடுகளை பயன்படுத்துகின்றனர். கிராமப்புற ரோடுகள் சாதாரண வாகனங்களின் எடையை கருத்தில் கொண்டு ரோடு அமைக்கப்பட்டு இருக்கும். இதன் ஆயுட் காலம் 15 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்படுகின்றன.
ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளை ஒப்பந்ததாரர் செய்ய வேண்டும் என்பது விதி. அதிக பாரங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களின் எடையை தாக்குப் பிடிக்க முடியாமல் விரிசல் ஏற்பட்டு ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி ரோடு சேதம் அடைகிறது. இதையடுத்து ஒப்பந்ததாரர் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.
பல லட்சம் செலவு செய்து போடப்பட்ட ரோடு குறுகிய காலத்தில் சேதம் அடைந்து விடுவதால் நிதி வீணாகிறது. சேதமடைந்த ரோடுகளில் கனரக வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் புழுதி ஏற்பட்டு கண்களை பாதிப்பதால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மதுரை- - துாத்துக்குடி -கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் விதிமீறி அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. அனுமதிக்கப்பட்ட எடை, மிதமான வேகம் இதுபோன்ற எந்த வித அரசு விதிகளையும் வாகன உரிமையாளர்கள் பின்பற்றுவது இல்லை.
அதிகாரிகளும் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். ரோடுகளை சேதப்படுத்தாத வகையில், அரசு அனுமதித்த எடையுடன் கொண்டு செல்ல வட்டார போக்குவரத்து அதிகாரிகள், கனிமவளத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்களில் ஏற்றப்பட்டுள்ள எடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.