/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
. சூப்பர் ரிப்போர்டர் - திருச்சுழி
/
. சூப்பர் ரிப்போர்டர் - திருச்சுழி
ADDED : டிச 20, 2024 02:24 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே மண்டபசாலையில் தெருக்களில் ரோடுகள் இன்றி சேறும் சகதியுமாகவும், கழிப்பறை, குடிநீர் வசதியின்றி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது மண்டபசாலை ஊராட்சி. இங்கு 10க்கும் மேற்பட்ட தெருக்கள், புறநகர் பகுதிகள் உள்ளன. ஊராட்சியில் பல தெருக்களின் ரோடுகள் இன்றி மண் ரோடாக இருப்பதால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக நடக்க முடியாத நிலையில் உள்ளது.
இதே போன்று வாறுகால்கள் இல்லாததால் கழிவுநீர் வீடுகளுக்கு முன்பு தேங்கி சுகாதார கேடாக உள்ளது. மண்டபசாலையில் அங்கன்வாடி கட்டடம் 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. இங்குள்ள குழந்தைகள் தற்காலிகமாக ஒரு வீட்டில் படித்து வருகின்றனர்.
பழைய வீடாக இருப்பதால் மழைக்காலங்களில் ஒழுகுகின்றது. இதேபோன்று இங்குள்ள ரேஷன் கடையும் ஓராண்டுக்கு மேலாகியும் பணி நடந்து கொண்டே இருக்கிறது.
புறநகர் பகுதியான பவித்ரா கிரன் நகர் உருவாகி 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. ரோடு வாறுகால்கள், குடிநீர் உட்பட வசதிகள் இல்லாததால் அந்தப் பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி மயானத்திற்கு செல்ல முறையான பாதை இல்லை.
ஊராட்சியின் பொது கழிப்பறைகள் இல்லாததால் மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டியுள்ளது. புறநகர் பகுதிகளில் மினி பவர் பம்ப், பொது அடிகுழாய்கள்இல்லை. ரோடுகள் போடப்பட்ட தெருக்களில் வாறுகால் கட்டப்படவில்லை. இதனால் ரோடு ஓரங்களில் கழிவுநீர் தேங்கி நோய் ஏற்படுகிறது.
ரோடு வேண்டும்
மணிகண்டன், அருப்புக் கோட்டை: மண்டபசாலையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. பல தெருக்களில் ரோடு இன்றி மண் ரோடாக இருப்பதால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக நடக்க முடியாதநிலையில் உள்ளது டூவீலர்கள் சேற்றில் சிக்கிக் கொள்கின்றன.
வாறுகால் இல்லை
விஜயன், விவசாயி: கிராமத்தில் உள்ள தெருக்களில் வாறுகால் கட்டப்படாததால் கழிவு நீர் வீடுகளுக்கு முன்பு மாதக்கணக்கில் தேங்கிக் கிடக்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று வருகிறது. மழைக்காலங்களில் கழிவு நீரும் மழை நீரும் கலந்து ரோடுகள் அருகில்தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
குடிநீர் வேண்டும்
கிருஷ்ணவேணி, குடும்ப தலைவி: புறநகர் பகுதிகளில் குடிநீர் வசதி இல்லை. தனியார் இடத்தில் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். ஊராட்சி மூலம் பொது அடிகுழாய்கள், மினி பவர் பம்ப் தொட்டி அமைக்க வேண்டும். மண்டபசாலை ஊரின் தலையாய பிரச்சனையே ரோடு, வாறுகால், குடிநீர் வசதிகள் தான். இதை ஊராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்.