/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சூப்பர் ரிப்போர்ட்டர் விசிட் செய்தி
/
சூப்பர் ரிப்போர்ட்டர் விசிட் செய்தி
ADDED : செப் 21, 2024 05:09 AM

சாத்துார்: ரோடு, வாறுகால், சுகாதார வளாகம், சமுதாய கூடம், அங்கன் வாடி மையம் உள்ளிட்ட அடிப்படை வசதி இன்றி பூசாரி நாயக்கன்பட்டியில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் சுப்பிரமணியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரி நாயக்கன்பட்டியில் தெருக்களில், ரோடு வசதி இல்லை.
பலஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் ரோடு கற்கள் பெயர்ந்து கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது. தெருக்களில் உள்ள வாறுகாலில் குப்பைகள் குவிந்து காணப் படுகின்றன.
ரோட்டின் ஓரத்திலும் காலியாக உள்ள நிலத்திலும் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சியில் பொது கழிப்பறை வசதி இல்லை. திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
தெரு விளக்குகள் திடீரென பழுதாகி எரியாமல் போவதால் இரவு நேரத்தில் கிராமம் இருளில் மூழ்கி விடுகிறது. குடிநீர் உப்பு சுவையுடன் உள்ளதால் மினரல் வாட்டரை குடம் ரூ10 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் ரோடு உயர்ந்து கொண்டே செல்வதால் பயணிகள் நிழற்குடை மண்ணுக்குள் புதைந்து கொண்டு வருகிறது.
அங்கன்வாடி மையம் தேவை
முத்துலட்சுமி, குடும்பத் தலைவி: கிராமத்தில் உள்ள குழந்தை படிப்பதற்கு அங்கன்வாடி பள்ளி மையம் இல்லை. பல கிலோமீட்டர் தூரம் சென்று குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் விட்டு வருகிறோம். கிராமத்திலேயே அங்கன்வாடி பள்ளி மையக் கட்டடம் கட்ட வேண்டும்.
சமுதாயக் கூடம் தேவை
கே.முனியாண்டி, குடும்பத் தலைவர்: வீட்டு விசேஷங்களை நடத்துவதற்கு கிராமத்தில் சமுதாயக்கூடம் இல்லாத நிலையில் தெருவில் பந்தல் போட்டு வீட்டு விசேஷத்தை நடத்தும் நிலை உள்ளது.
சமுதாயக்கூடம் கட்டி தந்தால் வீட்டு விசேஷங்களை அங்கு நடத்திக் கொள்ள வசதியாக இருக்கும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுன் பஸ் விட வேண்டும்
ஜெயமுருகன், குடும்பத் தலைவர்: பூசாரி நாயக்கன்பட்டிக்கு பஸ் வசதி இல்லை. பஸ் ஊருக்குள் வந்து செல்வது கிடையாது. இருசக்கர வாகனங்களில் தான் தாயில்பட்டி சாத்துாருக்கு சென்று வருகிறோம்.
இருசக்கர வாகனம் இல்லாதவர்கள் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது.
பூசாரி நாயக்கன்பட்டி வழியாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும்.
துப்புரவு பணியாளர் வருவதில்லை
செந்தாமரைக்கண்ணன், குடும்பத் தலைவர்: பூசாரி நாயக்கன்பட்டி வாறுகால் சுத்தம் செய்ய ஆட்கள் வருவதில்லை. குப்பைகள் வாங்குவதற்கு வீட்டிற்கு ஆட்கள் வராததால் காலியான இடங்களிலும் சாலை ஓரத்திலும் குப்பைகளை வீசி வருகின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
பொதுக் கழிப்பறை வசதி இல்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டித்தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.