
சாத்துார்: வெம்பக்கோட்டை ஒன்றியம் கணஞ் சாம்பட்டியில் ரோடு, தெருவிளக்கு இல்லை, திறக்காத கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கணஞ்சாம்பட்டியில் ரோடு முழுவதும் கரடு முரடாகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. முறையான வாறுகால் வசதி இல்லை.
மெயின் ரோட்டிலும் ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளி பகுதியிலும் பேவர் ப்ளாக் ரோடு போடப்பட்டுள்ளது.
குறுக்கு தெருக்களில் ரோடு,வாறுகால் வசதியில்லை. இதனால் பாதையில் கழிவு நீர் தேங்குகிறது. கழிப்பறைகளில் ஒன்று மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மற்ற ஒன்று புதியதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது.
சமுதாயக் கூடத்தின் கூரைகள் சேதமடைந்தும் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதன் அருகில் மகளிர் சுய உதவிக் குழு கட்டடமும் சேதமடைந்த நிலை உள்ளது.
ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளி அருகில் உள்ள ரோடு ஓரங்களை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
வாறுகால் முழுவதும் குப்பை கழிவுகள் குவிந்துள்ளது. கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியும் அதிகரித்து மக்கள் அவதிப்படுகின்றனர்.
பஸ் வசதி தேவை
சத்தியா, குடும்பத் தலைவி: கணஞ் சாம்பட்டிக்கு பஸ் வசதியில்லை. இதனால் மாணவர்கள், முதியவர்கள் என அனைவரும் 5 கி.மீ. துாரம் நடந்து தாயில்பட்டிக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது.
காலை மாலை நேரத்திலாவது டவுன் பஸ் இயக்கவேண்டும். கர்ப்பிணிகள், மூதாட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
நுாலகம் திறக்க வேண்டும்
கார்த்திக், குடும்பத் தலைவர் : கணஞ்சாம்பட்டியில் நுாலகக் கட்டடம் கட்டப்பட்டதோடு சரி இன்று வரை திறக்கப்படவில்லை அது வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. படித்த இளைஞர்கள், மாணவர்கள் நுாலகம் திறக்கப்படாததால் போட்டித் தேர்வுக்கு தயாராக வெளியூர் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது.
கழிப்பறை வசதி தேவை
செல்வக்குமார், குடும்பத் தலைவர்: ஆண்கள், பெண்களுக்கு என கழிப்பறை வசதியில்லை. ஒரு சுகாதார வளாகம் கட்டப்பட்டு திறக்கப்படாமலேயே சேதமடைந்து இடிந்து போய்விட்டது.
தற்போது மற்றொரு சுகாதார வளாகத்தை கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் இன்று வரை திறக்கவில்லை ஆண்களும் பெண்களும் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
கழிப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமுதாயக் கூடம் தேவை
ஆனந்த், பட்டாசு தொழிலாளி: சமுதாயக்கூடம் மகளிர் சுய உதவி குழு கட்டடங்கள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆவதால் அவை கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் மிகவும் பரிதாபமாக காணப்படுகிறது.
இதில் இப்பகுதி மக்கள் வீட்டு விசேஷங்களை நடத்தி வருகின்றனர்.
அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சமுதாய கூடத்தை அகற்றிவிட்டு புதிய சமுதாயக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.