/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சூப்பர் ரிப்போர்டர் விசிட் செய்தி
/
சூப்பர் ரிப்போர்டர் விசிட் செய்தி
ADDED : அக் 12, 2024 04:15 AM

சாத்துார்: ரோடு, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி புல்வாய் பட்டி ஊராட்சியில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தெருக்கள் குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது.
வாறுகால் வசதி இல்லாத நிலையில் ரோட்டிலும் காலியாக உள்ள இடத்திலும் கழிவு நீர் குளம் போல் தேங்கி உள்ளது. ஊராட்சியில் குப்பை கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் இல்லை.
குப்பை வாங்குவதற்கும் வீடுகளுக்கு ஆட்கள் வருவது கிடையாது. காலியாக உள்ள இடங்களில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடும் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் ரோடு பெயர்ந்து கால்களை பதம் பார்க்கும் வகையில் குண்டும் குழியுமாக உள்ளது.
வாறுகால் இடிந்து துார்ந்து போன நிலையில் காணப்படுகிறது. கழிவுநீரை அகற்ற துப்புரவு பணியாளர்கள் வருவது கிடையாது. மகளிர் சுய உதவி குழு கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது
மேல்நிலைத் குடிநீர்தொட்டி சேதம் அடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் உள்ளது.
பொது சுகாதார வளாகம் இல்லாத நிலையில் மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
உப்புத் தண்ணீர் அடிகுழாய் பழுதாகி செயல்படாமல் உள்ளது. வீட்டின் முன்பு கழிவு நீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது.
வாறுகால், ரோடு வசதி தேவை
முருகலட்சுமி, குடும்பத் தலைவி: ரோடு, வாறுகால் வசதி இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வாறுகால் தற்போது இடிந்து தூர்ந்து போன நிலையில் உள்ளது. ரோடு வசதியும் இல்லை. ஊராட்சியில் நிதி இல்லை என்று கூறி எந்தவசதியும் செய்து தர மறுக்கிறார்கள்.
துப்புரவு பணியர்கள் தேவை
விஜயலட்சுமி, குடும்பத் தலைவி: வாறுகால் சுத்தம் செய்வதற்கும் குப்பை வாங்குவதற்கும் துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. மாதம் ஒருமுறை இரண்டு பேர் மட்டும் வந்து தேங்கியிருக்கும் வாறுகாலில் உள்ள குப்பையை அள்ளி போடுகின்றனர். சாக்கடை ஆங்காங்கே தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாகஉள்ளது கொசுக்கடியால் அவதிப்படுகிறோம்.
நிதியின்றி வளர்ச்சி பணி பாதிப்பு
துரைராஜ், ஊராட்சி துணைத் தலைவர்: மகளிர் சுய உதவி குழு கட்டடம் பராமரிப்பு இன்றி சேதமடைந்த நிலையில் உள்ளது. சமுதாயக் கூடம், நுாலகம், சுகாதாரவளாகம் கட்ட ஊராட்சியில் போதுமான நிதி வசதி இல்லை.
எம்.எல்.ஏ., எம்.பி.,கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். ஒன்றிய கவுன்சிலர்கள் நிதியிலிருந்து வாறுகால் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.