/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சூப்பர் ரிப்போர்டர் விசிட் செய்தி
/
சூப்பர் ரிப்போர்டர் விசிட் செய்தி
ADDED : அக் 26, 2024 04:50 AM

சாத்துார்: சேதமடைந்த ஊராட்சி அலுவலக கட்டடம், சேதம் அடைந்த மேல்நிலைத் குடிநீர் தொட்டி, செயல்படாத சுகாதார வளாகம் என பல்வேறு பிரச்சனைகளால் புலிப்பாறை பட்டி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் மினரல் வாட்டர் குடிநீர் பிளான்ட் செயல்படாமல் உள்ளது. இங்கு இருபத்தாறு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் செயல்பட்டு வருகிறது.
சேதமடைந்த பொது சுகாதார வளாகம் பூட்டப்பட்டதால் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை உள்ளது. குடிநீர் குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்ட நிலையில் சிமென்ட் ரோடுகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. முதியவர்கள் குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பழைய கட்டடம் சேதமடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அகற்றிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்
ஊராட்சி அலுவலகம் தேவை
தர்மராஜ் குடும்பத்தலைவர்: புலிப் பாறைப்பட்டியில் ஊராட்சி அலுவலகம் கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது.
அலுவலகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து இடியும் நிலையில் உள்ளது.
மேல்நிலை குடிநீர் தொட்டி தேவை
அய்யனார், குடும்பத்தலைவர்: 1998ல் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி நான்கு துாண்களும் இடிந்து போன நிலையில் கம்பிகள் வெளியே தெரிகின்றன.
மேல்நிலைத் தொட்டியின் மேலே போடப்பட்டிருந்த காங்கிரிட் இடிந்து தொட்டிக்குள் விழுந்து விட்டது.
மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியை அகற்றி விட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும்.
வாறுகால்கள் தேவை
பொன்மணி, குடும்பத் தலைவர்: புலிப்பாறை பட்டி தெருக்களில் வாறுகால்கள் துார்ந்து சேதமடைந்துள்ளன. மழைக்காலத்தில் வாறுகாலில் உள்ள கழிவு நீரும் மழை நீரும் பாதையில் தேங்குவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
சேதமடைந்த நிலையில் உள்ள வாறுகால்களை அகற்றி விட்டு புதிய வாறுகால் கட்ட வேண்டும்.
மினரல் வாட்டர் பிளான்ட் தேவை
முருகன், குடும்பத் தலைவர்: சில மாதங்கள் மட்டுமே இயங்கிய மினரல் வாட்டர் பிளான்ட் பழுது ஏற்பட்டதால் தற்போது மூடப்பட்டு விட்டது .
இதனால் வேறு வழி இன்றி வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை குடம் ரூ.12க்கு விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
மினரல் வாட்டர் பிளான்டை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.