/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சூப்பர் ரிப்போர்டர் விசிட் செய்தி
/
சூப்பர் ரிப்போர்டர் விசிட் செய்தி
ADDED : செப் 14, 2025 03:37 AM
சாத்துார்:சாத்துார் அண்ணா நகரில் துார் வாரப்படாத ஓடை, திறக்கப்படாத சுகாதார வளாகத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் வணிக வளாகம் குடி யிருப்பு பகுதிகள் நிறைந்த வளர்ச்சி அடைந்து வரும் பகுதி. இங்கே பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டது.
இதன் காரணமாக அண்ணா நகர் பகுதியில் மெயின் ரோடு குறுக்கு தெரு என அனைத்து பகுதி தெருக்களும் ரோடுகளும் தோண்டப்பட்டதால் குண்டும் குழியுமாக மாறியது.
மக்கள் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தியதால் நகராட்சி நிர்வாகம் பெரும்பாலான தெருக்களில் பேவர் பிளாக் கல் ரோடு அமைத்துள்ளது. ஆனால் பல சிறிய குறுக்குத் தெருக்களில் இன்றுவரை ரோடு வசதி செய்து தரப்படவில்லை.
இதனால் சிறிய குறுக்குத் தெருக்களில் வசித்து வரும் முதியவர்கள் பள்ளி சிறார்கள் இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.
அண்ணாநகர் முதல் வடக்கு தெருவில் முறையான ரோடு வசதி இல்லாத நிலையில் இந்தப் பகுதியில் உள்ள பாதை குண்டும் குழியுமாகவும் கரடு முரடாகவும் உள்ளது.
இதன் அருகில் செல்லும் ஓடை முழுவதும் முள் செடி காடு போல வளர்ந்துள்ளது. தற்போது திடீரென மழை பெய்து வரும் நிலையில் ஓடையில் இருந்து விஷ பூச்சிகள் வீடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றன.
இதனால் இரவு நேரத்தில் மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது.
ரேஷன் கடை பூங்கா புதியதாக கட்டித் தரப்பட்டுள்ள போதும் இந்த பகுதி பயணிகள் நிழற்குடை கட்டித் தரப்படாமலேயே உள்ளது.
மேலும் இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள பெண்கள் சுகாதார வளாகம் பல மாதங்களாக திறக்கப்படாததால் மக்கள் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
குப்பையால் சுகாதாரக்கேடு தீனா, தனியார் நிறுவன ஊழியர்: அண்ணாநகர் ஓடை, பிரதான வாறுகாலில் குடியிருப்பு வாசிகள் குப்பையை கொட்டி வருவதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது.
இதில் அதிக அளவு கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இரவில் மட்டுமின்றி பகலிலும் கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஓடை வாறுகாலில் உள்ள குப்பையை அகற்ற வேண்டும்.
சுகாதார வளாகம் தேவை கார்த்திக், தனியார் நிறுவன ஊழியர்: அண்ணா நகர் பெண்கள் சுகாதார வளாகம் அடிக்கடி மூடப்பட்டு விடுகிறது இதனால் பெண்கள். காட்டுப்பகுதியையும் ஆற்றங்கரையையும் திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்துவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஆண் களுக்கு சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும்.
நிழற்குடை தேவை அங்குசாமி, வியாபாரி: அண்ணா நகரில் பெரும்பாலான பஸ்கள் நின்று செல்லும் நிலையில் இங்கு பயணிகள் நிழற்குடை இல்லை.இதனால் பயணிகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தபடியும் பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது.
இங்கு படித்த இளைஞர்கள் பலர் உள்ளனர். நுாலகம் அமைத்து தருவதன் மூலம்அரசு தனியார் வேலை வாய்ப்புக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடைவார்கள்.