புதர்மண்டிய நீர்வரத்து ஓடைகள்; தேங்கும் கழிவுகளால் சுகாதாரக்கேடு:ஸ்ரீவில்லிபுத்துாரில் தொடருது அவலம்
புதர்மண்டிய நீர்வரத்து ஓடைகள்; தேங்கும் கழிவுகளால் சுகாதாரக்கேடு:ஸ்ரீவில்லிபுத்துாரில் தொடருது அவலம்
UPDATED : ஜூன் 27, 2026 04:51 PM
ADDED : ஜூன் 27, 2026 04:51 PM

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நகர் , தாலுகாவில் பல்வேறு கண்மாய்களின் நீர்வரத்து ஓடைகள் புதர் மண்டியும், அதில் தேங்கும் கழிவுகளால் சுகாதாரக் கேடும் ஏற்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்துார் நகரை சுற்றி மொட்ட பெத்தான், வடமலைக்குறிச்சி, செங்குளம், பெரியகுளம், சோளங்குளம், ராஜகுலராமபேரி கண்மாய்கள் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர், நகரின் மேற்கு பகுதி கண்மாய்கள் நிரம்பி கிழக்குப் பகுதி கண்மாய்களுக்கும் தண்ணீர் வரும் வகையில் நீர்வரத்து ஓடைகளை நூற்றாண்டுக்கு முன்பே நம் முன்னோர் வடிவமைத்து வைத்திருந்தனர்.
இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை மழை நீர் எளிதாக கண்மாய்களுக்கு வந்தது. அதனை நம்பி பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை சாகுபடிகள் அதிகளவில் நடந்தது.
தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகையாலும், விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாகவும் மாறி ஆண்டுக்காண்டு குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் கண்மாய் நீர்வரத்து பாதைகள் எல்லாம் குடியிருப்புகளின் கழிவு நீர் செல்லும் பாதையாகிவிட்டது. அதிலும் வீடுகள், வணிக நிறுவனங்களில் கழிவுகள் கொட்டப்பட்டும், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியும் காணப்படுகிறது. பல ஆண்டுகளாக நீர்வரத்து பாதைகள் சுத்தம் செய்யப்படாததால் மண்மேவி ரோட்டிற்கு இணையாக மாறிவிட்டன.
பெரியகுளம் கண்மாயிலிருந்து குரங்கு பாலம் வழியாக செல்லும் நீர்வரத்து பாதையும், ஆத்துக்கடை வழியாக பெரியகுளம் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டும், அடைப்பட்டும், கழிவுகள் தேங்கி காணப்படுகிறது. இதே போல் வடமலைகுறிச்சியில் இருந்து செங்குளம் கண்மாய்க்கு செல்லும் பாதையும் மண்மேவி காணப்படுகிறது.
இதனால் கனமழை பெய்யும் காலங்களில் நகர் பகுதி ரோடுகள் எல்லாம் கழிவுநீர் வாறுகால்களாக மாறிவிட்டன. சுகாதாரக் கேடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, நீர் வரத்து பாதைகளை சுத்தம் செய்து தற்போதுள்ள நீர் ஆதாரங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
* விவசாயம் பாதிக்கப்படும்
பெரியகுளம் கண்மாய் தெற்கு பகுதியில் இருந்து வன்னியம்பட்டி, வடக்கு கரிசல்குளம் வழியாக சோளங்கும் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து பாதை புதர் மண்டி காணப்படுகிறது. இதனை சீரமைத்தால் எளிதாக கண்மாய்க்கு தண்ணீர் வரும். இல்லையெனில் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
- தர்மராஜ், சுயதொழில் முனைவோர்.
* தூர்வார வேண்டும்
படிக்காசு வைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, துலுக்கங்குளம், பிள்ளையார் குளம் பகுதி நீர்வரத்து பாதைகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கழிவுகள் தேங்கி செடி, கொடிகள் வளர்ந்து வருகிறது. இந்த நீர் வரத்து பாதையை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
- நித்யானந்தம், சுய தொழில் முனைவோர்.
* பெருக்கெடுக்கும் கழிவு நீர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் உள்ள கண்மாய்களின் நீர்வரத்து பாதைகள் மண் மேவி அடைபட்டு கிடக்கிறது. அதில் வீடுகள், வணிக வளாகங்களின் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. லேசான மழை பெய்தால் கூட ஆத்துக்கடை சந்திப்பு, பெரிய மாரியம்மன் கோவில், பஸ் ஸ்டாண்ட், கீழரதவீதி, வடக்கு வீதி சந்திப்பு பகுதிகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, நகர் பகுதியில் உள்ள நீர்வரத்து பாதைகளை முழு அளவில் சுத்தம் செய்ய வேண்டும்.
- ஈஸ்வரன், சமூக ஆர்வலர்.
